×

பொது தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருகிறது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு


சென்னை: தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருகிறது என்றுதான் கருத வேண்டியுள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றப் பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட முன் மொழிந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தோ, அதை பாட்னா உயர் நீதிமன்றம் தடை செய்தது என்றோ முதல்வர் எதுவும் பேசவில்லை. இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் சமூகநீதி குறித்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

முதல்வரின் உரை சட்டமன்ற குறிப்பேடுகளில் உள்ளது. ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பொதுவெளியில் பரப்ப வேண்டாம் என அன்புமணியை கேட்டுக் கொள்கிறேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாரா 68, 73 தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது எனவும், தரவுகளை சேகரித்து, இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 10.5 சதவீதம் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க, கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களுக்காக, தேர்தல் ஆதாயத்திற்காக, அவசர கோலத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

தக்க தரவுகள் இல்லாமல் இயற்றப்பட்ட இந்த சட்டம் செல்லாது என அறிவித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், உள்ஒதுக்கீடு வழங்க அண்மைக் காலத்தில் பெறப்பட்ட சாதிவாரி புள்ளி விவரங்கள் சேகரித்து ஆய்வு செய்யப்படவில்லை. உள்ஒதுக்கீடு வழங்க காலங்கடந்த புள்ளி விவரங்களை மட்டுமே அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் பீகார் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களை, முடிவுகளை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கான இரண்டு காரணங்களுள், உரிய சமூக, கல்வி, பொருளாதாரம் குறித்த தரவுகள் இன்றி, மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு வழங்கியதும் ஒன்றாகும்.

மேலும், பீகார் மாநிலம் மேற்கொண்ட சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருகிறது என்றுதான் கருத வேண்டியுள்ளது. அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, வன்னியர் சமுதாயத்தினருக்கு பயனுள்ளதாக அமைய இடஒதுக்கீடு குறித்து முழுமையாக ஆராய்ந்து, நீதிமன்றங்களால் சட்டங்கள் ரத்து செய்யப்படாமல் நிலைத்து நிற்கும் வகையில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பொது தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டும் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருகிறது: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,CHENNAI ,Law Minister ,Tamil Nadu government ,Bamaka ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...