×
Saravana Stores

பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்

சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84 சதவீத குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தினசரி உற்பத்தி ஆகும் 6150 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை கையாள்வதற்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, தூய்மை இந்தியா திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, இந்திய அரசு மற்றும் மாநில அரசின் வழிகாட்டுதல்களை அமல்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. சென்னை மாநராட்சியின் 15 மண்டலங்களிலும் தினசரி உருவாகும் தலா 3200 மெட்ரிக் டன் ஈரம் மற்றும் 2450 மெட்ரிக் டன் உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பரவலாக்கப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 500 மெட்ரிக் டன் அளவில் பயனற்ற கழிவுகள் தெருக்கள் மற்றும் சாலைகளின் ஓரங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உற்பத்தியாகிறது.

சென்னை மாநராட்சியில், உற்பத்தி ஆகும் இடத்தில் குப்பை கழிவுகளை தரம் பிரிப்பதை அமல்படுத்துவதற்கு தகவல், கல்வி மற்றும் தொடர்பு செயல்களின் மூலம் தொடர் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு 72 சதவிதம் அடைந்துள்ளது. சென்னை மாநராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்ளில், 10 மண்டலங்ளில் தினசரி துப்புரவு பணியை மேற்கொள்வதற்கு அர்பேசர் சுமித் மற்றும் சென்னை என்விரோ சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் ஆகிய தனியார்கள் வசம் வழங்கப்பட்டுள்ளது. வீடுதோறும் சென்று குப்பையை பெறுவது மற்றும் தரம் பிரிப்பது ஆகியவை முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் பணம் பட்டுவாடா செய்வதில் (Payment Mechanism) இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மண்டலங்களில் சென்னை மாநராட்சியின் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநராட்சியில் தினசரி உற்பத்தியாகும் 1020 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள், நுண் உரம் நிலையம், தோட்டக்கழிவுகள் மற்றும் இளநீர் குடுவைகள் மறுசுழற்சி மையம், காற்று புகும் வகையில் உரம் தயாரிக்கும் நிலையம் மற்றும் உயிரி எரிவாயு நிலையங்கள் போன்ற பரவலாக்கப்பட்ட நிலையங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் தினசரி உற்பதியாகும் 560 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் விஞ்ஞான ரீதியிலான எரியூட்டும் நிலையம், வளங்கள் மீட்பு மையம்/பொருட்கள் மீட்பு மையம் போன்ற மையங்களில் மறுசுழற்சிக்குரியவை முழுமையாக பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய உலர்கழிவுகள் சிப்பங்களாக கட்டப்பட்டு சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டு கூட்டு எரிபொருளாக பயன்படுகிறது.

பெருங்குடி குப்பை கிடங்கினை பயோமைனிங் முறையில் மீட்டெடுத்தல்
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த குப்பை கொட்டும் வளாகம் சுமார் 225.16 ஏக்கர் பரப்புளவில் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சி பயோ மைனிங் முறையில் நிலத்தினை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டது. பயோ மைனிங் முறையில் பல வருடங்களாக கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் விஞ்ஞான முறையில் பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் இதர உதிரி பொருட்களை பெரும்பான்மையான அளவில் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தவும் விஞ்ஞான முறையில் அகற்றப்படும்.

இந்த குப்பை கொட்டும் வளாகத்தில் சாலை மட்டத்திற்கு மேலாக சுமார் 34.02 லட்சம் கன மீட்டர் அளவிற்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது. பயோ மைனிங் முறையில் பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்கும் விதமாக ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் மொத்த காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.350.64 கோடி. தற்போது வரை சுமார் 84 சதவீத குப்பை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி ஜூலை 2024ம் ஆண்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Colungudi Garbage Warehouse ,Chennai ,Perunkudi Garbage Warehouse ,Chennai Municipal Corporation ,Columbudi Garbage Warehouse ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை