×

நாகர்கோவிலில் வாகனங்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள்

*காற்றில் பறப்பதால் சாலையில் செல்வோர் அவதி

நாகர்கோவில் : நாகர்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான டெம்போக்கள், ஆட்டோக்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் 11 இடங்களில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது. மக்காத குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. காலை முதல் 52 வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

இதற்காக மாநகராட்சி சார்பில் டெம்போக்கள், லோடு ஆட்ேடாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக குப்பைகளின் மேல் வலை விரிக்கப்பட்டு, காற்றில் பறக்காத வகையில் தான் கொண்டு செல்ல வேண்டும் என ஏற்கனவே மாநகராட்சி மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் மாநகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமாரும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த உத்தரவு காற்றில் பறக்கிறது.

இதன் காரணமாக டெம்போக்கள், ஆட்டோக்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள் காற்றில் பறக்கிறது. அதை விட கழிவுகள் பின்னால் பைக்குகளில் செல்பவர்களின் மீது விழுந்து விடுகிறது. சில சமயங்களில் பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்ட கழிவுகள் சாலையின் நடுவிலும், கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்களின் முன்புறமும் விழுந்து கிடக்கின்றன. ஆனால் டெம்போக்கள், லோடு ஆட்டோக்களில் செல்பவர்கள் இதை கண்டு கொள்வது கிடையாது.

மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து குப்பைகளை வழங்க வேண்டும், சாலை ஓரங்களில் வீசக்கூடாது என பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாலையோரம் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி வாகனத்தில் இருந்தே குப்பைகள் பறந்து சாலைகளில் செல்பவர்கள் மீது விழுவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் முக்கிய சாலைகளில் மாநகராட்சி அலுவலகம் வழியாகவே திறந்த நிலையில் குப்பை வண்டிகள் செல்கின்றன. தற்போது காற்று வேகமாக வீசும் காலம் என்பதால், திறந்த நிலையில் செல்லும் குப்பைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை ஆகும்.

The post நாகர்கோவிலில் வாகனங்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Avadi Nagercoil ,Dinakaran ,
× RELATED வணிக நிறுவனங்களில் குப்பை எடுக்க பணம்...