×

இடலாக்குடியில் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும்

*ஆய்வின்போது மேயர் உத்தரவு

நாகர்கோவில் : இடலாக்குடி பகுதியில நேற்று மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பரக்கின்காலில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி வார்டு வாரியாக மேயர் மகேஷ் கடந்த சில மாதத்திற்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கவுன்சிலர்கள், பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது அந்தந்த வார்டுகளில் என்ன பணிகள் செய்யவேண்டும் என பட்டியல் தயாரித்து தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்திற்கும், குடிநீருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாநகரம் முழுவதும் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேயர் மகேஷ் சில வார்டுகளில் திடீர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 26வது வார்டு இடலாக்குடியில் ஆய்வு செய்தார்.

இடலாக்குடி நாயுடு மருத்துவமனை பின்புறம் சாஸ்திரிநகர் பகுதி வழியாக செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் புதர்கள் மண்டி, அந்த பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் சீராக செல்லவில்லை எனவும், அந்த தண்ணீர் வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை இருந்து வருவதாக பொதுமக்கள் மேயரிடம் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பார்வையிட்டார். மேலும் கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களையும், கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களையும் அகற்றி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

மேலும் சுகாதாரப்பணிக்கு முக்கியத்தும் கொடுத்து அதிகாரிகள் பணி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேயர் உத்தரவிட்டதை தொடர்ந்து பொக்லைன் கொண்டு கால்வாயில் தேங்கி கிடக்கும் புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணியை இன்றுடன் செய்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, பகவதிபெருமாள், பிட்டர் பாலு, தொழில்நுட்ப உதவியாளர் பத்மநாபன், கவுன்சிலர் சொர்ணதாய், திமுக வட்டச்செயலாளர்கள் சாகுல், அன்சாரி, பகுதி செயலாளர்கள் துரை, ஷேக்மீரான், தொண்டரணி ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

₹65 லட்சத்தில் சாலை பணி

நாகர்கோவில் மாநகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட பள்ளவிளை சானல்கரையில் ₹59 லட்சம் செலவில் தார்சாலையும், 6வது வார்டுக்குட்பட்ட பள்ளிவிளை சானல்கரை குறுக்குதெருவில் ₹6 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரிபிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் ராஜசீலி, கவுன்சிலர்கள் அருள்சபிதா, அஷனா பிறைட், அமலசெல்வன், பகுதி செயலாளர் ஷேக்மீரான், வட்டச்செயலாளர்கள் பிரபாகரன், பீட்டர், ரெமிஜூஸ், எம்.ஜே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post இடலாக்குடியில் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Idalakudi ,Nagarko ,Mayor ,Mahesh ,Barakingal ,Idalakudi Canal ,Dinakaran ,
× RELATED குமரியில் நீர்நிலை கரையோரம்...