×

கும்பலால் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 2 பழங்குடியின பெண்கள் எரித்து கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்; யாரையும் கைது செய்யாமல் போலீஸ் அலட்சியம்

இம்பால்: மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களை சிலர் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மேலும் 2 பழங்குடியின பெண்கள் கடத்தி சித்ரவதை செய்து கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மை பிரிவினரான மெய்டீஸ் இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குகி பழங்குடியினத்தவர்கள் பேரணி நடத்தியதால் கடந்த மே மாதம் 3ம் தேதி அம்மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை கடந்த 2 மாதமாக நீடிக்கிறது. இதில் 165க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மலை பகுதிகளில் வசிக்கும் குகி இனத்தவர்கள் குறிவைத்து கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மே 4ம் தேதி குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மேலும் 2 பழங்குடியின பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பதைபதைக்க வைக்கும் சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.

பழங்குடியின பெண்கள் நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்ட அதே நாளில் இந்த 2 பெண்களும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். 21 மற்றும் 24 வயதுடைய இந்த 2 பெண்களும் கங்போக்பி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இம்பாலில் வாடகை வீட்டில் ஒன்றாக தங்கி அருகில் உள்ள கார் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். மே 5ம் தேதி மாலை இதில் ஒரு பெண்ணின் தாய் தனது மகளின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது போனில் மணிப்பூரி மொழியில் பேசிய வேறொரு பெண் மிரட்டி போனை துண்டித்துள்ளார்.

அதன்பின் உறவினர் மூலமாகத்தான் அந்த தாய்க்கு தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று ஆண், பெண்கள் அடங்கிய கும்பல் ஒன்று 2 இளம்பெண்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு வந்துள்ளது. குகி இனத்தை சேர்ந்த பெண்கள் எங்கிருக்கிறார்கள் என அப்பகுதியினரிடம் விசாரித்து, 2 பெண்களையும் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள தொழிற்சாலைக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கும்பல் கதவை மூடி, அவர்களை நிர்வாணமாக்கி சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது. பெண்களின் தலைமுடியை வெட்டி சித்ரவதை செய்துள்ளனர். இதில் இரு பெண்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் எரித்து கொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கொல்லப்பட்ட பெண்ணின் தாய், கடந்த மே 16ம் தேதி சாய்குல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், அடையாளம் தெரியாத சுமார் 100-200 பேர் கொண்ட கும்பல் தன் மகளையும் மற்றொரு பெண்ணையும் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை கடந்த மாதம் 13ம் தேதிதான் போலீசார் சம்பந்தப்பட்ட இம்பாலின் போரோம்பட் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரையில் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. போலீஸ் டிஜிபி ராஜிவ் சிங் உட்பட எந்த போலீஸ் உயர் அதிகாரியும் இதுதொடர்பான கேள்விகளுக்கு எந்த பதிலும் தரவில்லை. எரித்து கொல்லப்பட்ட பெண்களின் போட்டோவை மட்டுமே போலீசார் அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி அடையாளத்தை உறுதி செய்துள்ளனர். 2 பெண்களின் சடலம் எங்குள்ளது, அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை என்னவானது என்பது பற்றி கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. இதுபோல மணிப்பூர் வன்முறையில் இன்னும் ஏராளமான பழங்குடியின பெண்கள் பலர் சித்ரவதைகளுக்கு ஆளாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் குவிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* ஜனாதிபதி ஆட்சியே ஒரே வழி
மூத்த அரசியல் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபல் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘தற்போதுள்ள ஒரே வழி: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்க வேண்டும், 356 சட்டப்பிரிவை (ஜனாதிபதி ஆட்சி) அமல்படுத்த வேண்டும், நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நிர்பயா சம்பவத்திலிருந்து இதுவரை எதுவும் மாறவில்லை. உன்னாவ், ஹத்ராஸ், கதுவா, பில்கிஸ் வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் மகள்களை காப்பாற்றுங்கள் பிரதமர் அவர்களே’ என கூறி உள்ளார்.

* ஆறாவது குற்றவாளி கைது
பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்திய வழக்கில் 6வது குற்றவாளியை மணிப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 19 வயதுடையவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்றத்தில் நாளை போராட்டம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். காந்தி சிலை முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும்.

* மேற்கு வங்க வீடியோ வைரல்
பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘‘கடந்த 19ம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், பமன்கோலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பக்காவ் ஹட் பகுதியில் 2 பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி இரக்கமின்றி அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதை போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். அங்கு தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை எல்லாம் பார்த்து மம்தா பானர்ஜியின் இதயம் நொறுங்காது. ஏனென்றால் இது அவரது சொந்த மாநிலம். ஆனால் மணிப்பூர் என்றால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் அல்லவா’’ என விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

The post கும்பலால் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 2 பழங்குடியின பெண்கள் எரித்து கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்; யாரையும் கைது செய்யாமல் போலீஸ் அலட்சியம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது