×

டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாடு நிறைவு: தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: டெல்லியில் 2 நாள் ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். ஜி20 அமைப்பின் இந்திய தலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளைக் கொண்ட ஜி20 அமைப்பின் இந்த ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.

கடந்த 10 மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு ஜி20 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் இறுதியாக ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்ற முதல் நாள் மாநாட்டில், ஜி20 பிரகடனம் எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதோடு, இந்தியாவின் கோரிக்கைப்படி, ஜி20 அமைப்பில் 55 நாடுகளின் கூட்டமைப்பான ஆப்ரிக்க யூனியனும் இணைக்கப்பட்டது. இந்நிலையில், மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.

காலையில் முதல் நிகழ்வாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மழைக்கு நடுவே வருகை தந்த அவர்களுக்கு அங்கவஸ்திரம் அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். காந்தி நினைவிடத்தில் ஷூ, செருப்பு அணிந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோடி உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் வெறும் காலுடன் சென்றனர். அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்டோர் அங்கு தரப்படும் பிரத்யேக காலணியை அணிந்து சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்திற்கு உலக தலைவர்கள் வந்தனர். அங்கு, மாநாட்டின் நிறைவாக, மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மாநாட்டின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பதாகும். இதில், ‘ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் 3வது கருப்பொருளின் கீழ், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும், பிரேசில் அதிபர் லூயிசும் அவரவர் நாட்டின் பிரத்யேக மரக்கன்றை பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். ஜி20 அமைப்பின் இந்திய தலைமைக்கு அனைத்து உலக தலைவர்களும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி, ‘‘கடந்த 2 நாட்களில், நீங்கள் பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி உள்ளீர்கள். பல்வேறு முன்மொழிவுகளையும் பரிந்துரைத்துள்ளீர்கள்.

இந்த ஆலோசனைகளை எவ்வாறு விரைவுபடுத்துவது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். நவம்பர் 30ம் தேதி வரை ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கும். எனவே, நவம்பர் இறுதியில் ஜி20 மாநாட்டின் மற்றொரு அமர்வை மெய்நிகர் அமர்வாக நடத்த வேண்டும் என்பது எனது பரிந்துரை. அந்த அமர்வில், இந்த உச்சிமாநாட்டில் ஆலோசிக்கப்பட்ட சிக்கல்களை மதிப்பாய்வு செய்யலாம். நீங்கள் அனைவரும் அதில் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இத்துடன் ஜி20 உச்சி மாநாடு நிறைவுற்றதாக அறிவிக்கிறேன். இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆப்ரிக்க யூனியன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

இனி நமது கூட்டு முயற்சிகள் குறிப்பிட்ட கண்டங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளிக்கும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு தலைமை தாங்கி வழிநடத்தும் அதிகாரத்தை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் வழங்கினார். இதன் அடையாளமாக சம்பிரதாய வழக்கப்படி சுத்தியலை அவர், பிரேசில் அதிபரிடம் வழங்கினார்.

அதை பெற்றுக் கொண்ட அவர், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்காக குரல் கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரமில்லாத உறுப்பு நாடுகளாக புதிய வளரும் நாடுகள் சேர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்திய அவர், உலக வங்கி, சர்வதேச நிதியத்திலும் வளரும் நாடுகள் அதிகளவில் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டுமென பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 அமைப்பிற்கு பிரேசில் தலைமை வகிக்கும்.

*உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சாதித்ததா?

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் உலக நாடுகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஜி20 மாநாட்டில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தில் ரஷ்யா, உக்ரைன் போர் விவகார பிரகடனத்தை எந்த நாடும் எதிர்ககாமல் ஏற்றுக் கொண்டிருப்பது ராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. இந்த தீர்மானத்தில், ‘இது போருக்கான காலம் அல்ல. எந்த ஒரு நாடும் சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும். ஒரு நாட்டை கைப்பற்ற தனது பலத்தை பயன்படுத்த கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை சீனா, ரஷ்யா வெகுவாக வரவேற்றுள்ளன. உக்ரைனுடன் போரிட்டு வரும் நிலையில், இது இருதரப்பை சமமாக பாவித்த தீர்மானம் என ரஷ்யா பாராட்டி உள்ளது. தீர்மானத்தை தயாரிக்கும் பணிக்கு தலைமை வகித்த இந்தியாவின் ஷெர்பா அமிதாப் காந்த் கூறுகையில், ‘‘ஜி20 தீர்மானத்தில் மிகவும் சிக்கலான விஷயம் ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தான். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த எங்கள் குழு 200 மணி நேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. 300 முறை இருதரப்பு கூட்டங்களை நடத்தி, 15 வரைவுகளை தயாரித்த பின்னரே, உக்ரைன் விவகாரத்தில் தீர்மானத்திற்கு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆனால், சிஎன்என் உள்ளிட்ட மேற்கத்திய மீடியாக்கள் இந்தியாவின் தீர்மானத்தை பெரிதும் விமர்சித்துள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை கண்டிப்பதை இந்தியா வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாக கூறி உள்ளன. இந்த மென்யைான தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பது முரண்பாடானது என்று கூறி உள்ளன. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘‘இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. அந்த அமைப்பில் நாங்களும் ஒரு அங்கமாக இருந்திருந்தால் பங்கேற்பாளர்கள் நிலைமையை இன்னும் சரியாக புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்’ என கூறி உள்ளது. அதே சமயம் இந்தியாவின் தீர்மானம் ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

*மனித உரிமைகளை மதிக்க மோடியிடம் பைடன் வலியுறுத்தல்
ஹனோய்: வியட்நாம் தலைநகரில் ஹனோயில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன். இவ்வாறு பைடன் கூறினார்.

*‘ஐநாவில் மாற்றம் தேவை’ மீண்டும் மோடி கோரிக்கை
ஐநா உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் மோடி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஜி20 மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், ‘‘சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகத்தை அழைத்துச் செல்ல, உலக அமைப்புகள் தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப இருப்பது அவசியம். இன்று, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஐ.நா. நிறுவப்பட்டபோது, 51 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தன. இன்று, 200க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராகி உள்ளன. இருப்பினும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன). உலகம் அதன் பிறகு ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாறிவிட்டது. போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம் மற்றும் கல்வி என, ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. இந்த புதிய யதார்த்தங்கள் உலகளாவிய அமைப்புகளிலும் பிரதிபலிக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப மாறாதவர்கள் தங்கள் பொருத்தத்தை இழந்துவிடுவார்கள் என்பது இயற்கையின் நியதி’’ என கூறினார்.

*பிரான்ஸ், கனடா, ஜெர்மனி தலைவர்களுடன் சந்திப்பு
ஜி20 மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரான்ஸ் அதிபருடனான பேச்சுவார்த்தையில், இந்தியா, பிரான்ஸ் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்தவும் இரு நாட்டு தலைவர்களும் உறுதி ஏற்றனர்.

இந்தியா, துருக்கி இடையே வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்தார்.
தெற்காசியாவில் இந்தியா தங்களின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி என்றும் அவர் புகழ்ந்து பேசினார். இதே போல, ‘பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கனடாவின் முக்கிய நட்புறவு நாடு இந்தியா’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

*முன்கூட்டியே வியட்நாம் புறப்பட்ட ஜோ பைடன்
ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார். அவர் 2ம் நாள் நிகழ்ச்சியின் மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த மாநாடு குறித்து பைடன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘பருவநிலை நெருக்கடி, பலவீனமான சூழல், போர்கள் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில், நமது மிக முக்கியமான பிரச்னைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காண முடியும் என்பதை ஜி20 உச்சி மாநாடு நிரூபித்துள்ளது’’ என இந்தியாவின் தலைமையை பாராட்டினார்.

The post டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாடு நிறைவு: தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Brazil ,G20 summit ,Delhi ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...