×

இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அபராதம் விதித்துள்ளது. மேலும், பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தலாம், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் என எந்த உரிமையையும் இருக்க முடியாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் கம்மவார் சமூக நல சங்கத்தின் செயலர் மகாலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “இறுதி ஊர்வலத்தின் போது தெருக்களை பயன்படுத்தாமல், பொதுமக்களுக்கு எவ்விதமான தொல்லையும் ஏற்படுத்தாத வகையில் பிரதான சாலையை பயன்படுத்தி சுடுகாட்டிற்கு செல்ல உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, “இது போல கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு அந்த சங்கத்திற்கு உரிமை இருக்கிறதா? என்பதையும் அவர்களது தரப்பில் நிரூபிக்கவில்லை. பஞ்சாயத்துக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தலாம், அதில் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமென எவ்வித உரிமையும் இருக்க முடியாது என்பதை காட்ட நீதிமன்றம் விரும்புகிறது.

இந்த மனு பாகுபாடு காட்டுவதை ஆதரிக்கும் விதமாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் தொடரப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தை பொதுமக்களுக்கான தொல்லையாக மனுதாரரின் கூட்டமைப்பு எவ்வாறு கருதுகிறது என்பது தெரியவில்லை. மனுதாரரின் கூட்டமைப்பு கிராம மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் இப்படி மனுக்களை தாக்கல் செய்து தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு மனுதாரருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை அமர்வின் சட்ட உதவிகள் மையத்திற்கு 15 நாட்களுக்குள்ளாக செலுத்த உத்தரவிட்டனர்.

The post இறுதி ஊர்வலத்திற்கு வேறு சாலைகளை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Chennai High Court ,Panchayat ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...