×

மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக முதல்வரிடம் குவியும் நிதி: திருமாவளவன், தொழிலதிபர்கள் நேரில் வழங்கினர்

சென்னை: மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் முதல்வரை நேரில் சந்தித்து நிதியை அளித்து வருகின்றனர்.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். அதேபோல், மற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்தவகையில் சென்னை, தலைமைச்செயலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அதேபோல், அசோக் லேலண்ட் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஷேணு அகர்வால் முதல்வரிடம் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அசோக் லேலண்ட் நிறுவன சமூக பொறுப்பு தலைவர் பாலசந்தர், துணைத்தலைவர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல், பி.ஜி.எஸ் குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவன நிறுவனர் ராஜீவ் கார்த்திகேயன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தேவ் ஆனந்த் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண பணிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

 

The post மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்காக முதல்வரிடம் குவியும் நிதி: திருமாவளவன், தொழிலதிபர்கள் நேரில் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Migjam ,Thirumavalavan ,CHENNAI ,
× RELATED மிக்ஜாம் புயலால்...