×

யூஸ் அண்ட் த்ரோ காலத்திலும் மை பேனா ரிப்பேர் தொழில் மீது மையல் கொண்ட ‘பென்’ நண்பர்

*சிறு பெட்டியில் பொன் எழுத்து ஆயுதங்கள்

*55 ஆண்டுகளாகியும் விடாமல் தொடர்கிறார்

மதுரை : இன்றைய யூஸ் அண்ட் த்ரோ கலாச்சார காலத்தில் பலரின் பொன் எழுத்துக்களுக்கு இப்போதும் ஒரு பேனா மெக்கானிக் தனது மை பேனாக்களால் வடிவம் வழங்கி வருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு சித்திரை வீதி பகுதியில், கடந்த 55 ஆண்டுக்கும் மேலாக சிறிய பெட்டியுடன் கடை வைத்திருப்பவர் சீனிவாசன்(75). பேனா மெக்கானிக். கடந்த 55 ஆண்டுகளில் அப்பகுதி கட்டிடங்கள், வணிகங்கள் என பல மாற்றங்களை கண்டிருந்தபோதும் சீனிவாசன் மாறவில்லை. இன்று வரை பேனா மெக்கானிக் தொழிலை தனது வாழ்வாதாரமாக செய்து வருகிறார்.

கடந்த 1930ல் சீனிவாசனின் தந்தை ராஜாராம் பேனா மெக்கானிக் தொழில் செய்து வந்தார். 1965ம் ஆண்டில் தனது 17வது வயதில் பேனா மெக்கானிக் தொழிலுக்கு சீனிவாசன் வந்தார். தந்தையிடம் தொழில் கற்றார். 1968ல் தந்தை காலமாகி விட, அந்த சிறு பெட்டிக்கடை தந்தையின் சொத்தாக சீனிவாசனிடம் வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் பல வடிவங்களில் ரூ.4 முதல் ரூ.8 என பேனாக்கள் விலை இருந்தன. ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா என விலை உயர்ந்த வெளிநாட்டு பேனாக்களும் விற்பனைக்கு வந்தன. அன்று சமூகத்தில் பேனா ஒரு மதிப்பு மிகுந்த பொருளாக கருதப்பட்டது.

பின்னர் பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால், மை பேனாக்கள் மோகம் குறைந்தது. அடிக்கடி மை ஊற்ற வேண்டும். பேனா நிப் சரி செய்ய வேண்டும். மை கசியும் போன்ற காரணங்களால் மை பேனாக்கள் மக்களிடம் இருந்து மெல்ல விடைபெற ஆரம்பித்தன. தொடர்ந்து வந்த கணினி நுட்பம் விரித்த இணைய வலையில் தற்போது எழுத்து வேலை குறைந்து பால் பாயிண்ட், மை பேனா என எந்த வகை பேனா என்றாலும் அவை யூஸ் அண்ட் த்ரோ பழக்கமாக வாழ்க்கை மாறி விட்டது. தற்போது பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக ஊழியர்கள் என சிலரே தற்போது மை பேனாக்களுக்கு இன்னும் உயிர் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து சீனிவாசன் கூறும்போது, ‘‘அன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் மை பேனா மட்டுமே பயன்படுத்துவர். அதனால் அதன் தேவையும், ரிப்பேர் வசதியும் தேவைப்பட்டது. தற்போது மை பேனா பயன்பாடு அதிகம் இல்லை. 1985ம் ஆண்டு வரை பிசியாக இருந்தேன். எதிலும் தற்போது யூஸ் அண்ட் த்ரோ கலாசாரமாக மாறி விட்டது. சென்னை பாரிஸ் பகுதியில் நூறாண்டு கடந்த பிரபலமான பேனா கடை ஒன்று இன்றும் உள்ளது. மதுரையில் முன்பு பல பேனா மெக்கானிக்குகள் இருந்தனர்.

தற்போது நான் மட்டுமே இந்த வேலையை செய்து வருகிறேன். முன்னாள் அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள். ஆசிரியர்கள், டாக்டர்கள் என சிலர் இப்போதும் தேடி வருவார்கள். பயன்படுத்தும் விதத்தை பொறுத்து ஒரு மை பேனா 6 மாதம் வரை நன்றாக எழுதும். பிறகு பேனா நிப் மட்டும் மாற்ற வேண்டியது வரும். திடீரென மை கசிவது, பேனா நிப் பழுதாகி சரியாக எழுதாமல் போவது போன்ற காரணங்களால் பேனாக்கள் ரிப்பேருக்கு வரும். இவை தான் பேனாவின் முக்கிய ரிப்பேர்கள்.

பேனா நிப் உள்ளிட்டவை மாற்றி சரி செய்த பிறகு அந்த பேனா மீண்டும் நன்றாக எழுதும். இடது பக்கம் கொஞ்சம் லேசாக சாய்த்து எழுத வேண்டும். நேராக பேனாக்களை பிடித்து எழுதினால் சரியாக வராது.கலைஞர் வைத்திருந்த பேனா மிகவும் எளிமையானது. அவர் பயன்படுத்திய வகை பேனாக்கள் நிறைய மை பிடிக்கும். மை அளவும் தெரியும். அயராத எழுத்து பணி கொண்டிருந்தார் கலைஞர். தொடர்ந்து எழுதி கொண்டிருந்தார். இதனால் அவரது எழுத்து பணிக்கு இடையூறு ஏற்படாத வகையிலான பேனாவை கலைஞர் பயன்படுத்தினார். இந்த வகை பேனாக்கள், மை நிறைய பிடிக்கும். அடிக்கடி மை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது’’ என்றார்.

The post யூஸ் அண்ட் த்ரோ காலத்திலும் மை பேனா ரிப்பேர் தொழில் மீது மையல் கொண்ட ‘பென்’ நண்பர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி,...