×

இலவச பஸ் சேவை திட்டத்தால் பாதிப்படைந்ததால் பெங்களூருவில் டாக்சி, ஆட்டோ, தனியார் பஸ் போராட்டம்: அமைச்சர் வாக்குறுதியை ஏற்று வாபஸ்

பெங்களூரு: கர்நாடக அரசின் சார்பில் பெண்கள் இலவசமாக பஸ் பயணம் செய்யும் சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சிகள், கேப்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், தங்களுக்கு மாதந்தோறும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தங்கள் மீது விதித்துள்ள வரிகளை குறைக்க வேண்டும். இது தவிர செயலி மூலம் இயங்கிவரும் கார், பைக் உள்ளிட்ட சேவைகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 11ம் தேதி (நேற்று) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பெங்களூருவில் வழக்கமாக போக்குவரத்து சேவை இருந்தது.

தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஆனால் 80 சதவீதம் ஆட்டோக்களின் சேவை இருந்தது. குறிப்பிட்ட ஓரிரு ஆட்டோ சங்கத்தினர் மட்டுமே முழு அடைப்பில் பங்கேற்றனர். ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கியது. முழு அடைப்பு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் வழக்கம்போல் இருந்தது. போராட்டம் நடந்த சுதந்திர பூங்காவுக்கு மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி நேரில் வந்து தனியார் வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். இதில் 12 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதையேற்று முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

* அரசு பஸ்சில் பயணம் செய்த அனில்கும்பளே
பெங்களூருவில் கேப் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் கேப் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் விமானத்தில் வந்த பயணிகள் கேப் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையே வெளி மாநில சுற்றுப்பயணம் சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில்கும்பளே, கேப் கிடைக்காததால் விமான நிலையத்தில் இருந்து பனசங்கரி வரை மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.

The post இலவச பஸ் சேவை திட்டத்தால் பாதிப்படைந்ததால் பெங்களூருவில் டாக்சி, ஆட்டோ, தனியார் பஸ் போராட்டம்: அமைச்சர் வாக்குறுதியை ஏற்று வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka government ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி...