×

இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் 33 ஆயிரம் பேருக்கு இ-பட்டா வழங்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு

சென்னை: இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் 33,895 பேருக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலுரையில் பேசியதாவது: 2023-24ம் நிதியாண்டில் மாநில ஆண்டுத் திட்ட ஒதுக்கீடான ரூ.77,930.30 கோடியில் ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1,595.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதெபோல, இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்திற்காக, ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2022-23ம் நிதியாண்டில் 511 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில், இத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்ட 1,66,504 பயனாளிகளில், 1,32,609 நபர்களுக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 33,895 நபர்களுக்கும் விரைவில் இ-பட்டா வழங்க, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் முதல்வரின் முத்தான திட்டத்தைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 70 சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்பட்டு, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் எதிர்காலத்தில் அதிகரிப்பதோடு, சமூக நல்லிணக்கமும் ஏற்படும்.

சட்டத்தால் மட்டுமே வன்கொடுமையை தடுத்திட முடியாது. மாற்றம் மட்டுமே மனங்களை இணைக்கும். மனமாற்றம் மட்டுமே மனங்களை இணைக்கும். மதங்களை கடந்தும், இனங்களைக் கடந்தும். சாதியம் கடந்தும், மனிதம் வளர்க்கும்.
முதல்வரின் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம், இதுவரை பெறப்பட்ட 1820 மனுக்களில், 987 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளது. எஞ்சிய 839 மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்த நிதி ஒதுக்கீடான, ரூ. 3,512.85 கோடியில், கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 62.81 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 2022-23-ஆம் ஆண்டின் புதிய முன்னெடுப்புகளாக, ஆதிதிராவிட நல பள்ளிகளுக்கு ரூ.3.16 கோடி மதிப்பீட்டில், அறிவுத்திறன் பலகைகள், ரூ. 3.15 கோடி மதிப்பீட்டில், அறிவியல் ஆய்வுக்கூட உபகரணங்கள், ரூ. 14.82 கோடி மதிப்பீட்டில் 6 பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 15 கோடி செலவில், 366 விடுதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வர் கலைஞரின் முத்தான திட்டமான சமத்துவபுரம் திட்டம் எப்படி அனைத்து சமுதாயமும் இணைந்து இருக்கும் வகையில், சமூகநீதி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டதோ, அதுபோல, முதல்வரின் அனைத்து பள்ளிகளையும், பள்ளிக்கல்வித் துறையில் இணைக்கும் முடிவு என்பது சமூக நீதி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் என்பதில் துளியும் ஐயமில்லை. அதேபோல, 2021-22-ம் ஆண்டு, 443 இருளர்களுக்கு வீடு வழங்க நிதி ஒதுக்கீடு, 2022-23ம் ஆண்டு, அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடி மக்களுக்காக 1094 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு பத்மஸ்ரீவிருது பெற்ற, இருளர் பழங்குடி இனத்தைச் சார்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோர்களை நேரில் அழைத்து சிறப்பித்தது, தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளில், 227 பழங்குடியின குடும்பங்களுக்கான பங்குத் தொகை, ரூ 3.66 கோடி வழங்கியது, 2022-23ம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், நிதியுதவி பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டு, 19,042 ஆதிதிராவிடர் மற்றும் 1,502 பழங்குடியினருக்கு ரூ.171.82 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2022-23ம் ஆண்டு 7,098 பயனாளிகளுக்கு, தொழில் தொடங்க ரூ.104.97 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் 1,853 இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ. 32.17 கோடி நிதியுதவி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தாட்கோ மூலம், 1,992 உறுப்பினர்கள் கொண்ட 166 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கிக்கு ரூ. 17.92 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம், பொறியியல், செவிலியர் போன்ற முழுநேர பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 46 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயனடைந்துள்ளது.

The post இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் 33 ஆயிரம் பேருக்கு இ-பட்டா வழங்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Kayalvizhi Selvaraj ,Chennai ,Adi Dravidar ,Tribal Welfare Department ,
× RELATED பழங்குடியின குடியிருப்புகளின்...