×

ஏலச்சீட்டு நடத்தி ரூ.74.50 லட்சம் மோசடி; நிதி நிறுவன அதிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்: செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு: செய்யாறு அடுத்த அனக்காவூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.74.50 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன அதிபரை சேத்துப்பட்டில் பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூரை சேர்ந்தவர் தியாகராஜன்(39). எலக்ட்ரீசியன். இவர் கோழிப்பண்ணை, பைனான்ஸ் தொழில் என பல்வேறு தொழில்களை செய்து வந்தார். அதோடு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாதாந்திர, வாரச்சீட்டு, குலுக்கல் சீட்டு என 50க்கும் மேற்பட்ட சீட்டுகளை நடத்தி வந்தார். இவரிடம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீட்டுகளில் இணைந்து இருந்தனர்.

சீட்டை எடுக்கும்போது அவர்களிடம் பணத்தை தராமல், அதற்கு பதில் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை தருவதில்லையாம். இவ்வாறு 35க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.74 லட்சத்து 50 ஆயிரம் வரை இவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக அனக்காவூர் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் புகார் அளித்தனர். இதை அறிந்ததும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தியாகராஜன் தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் தியாகராஜன், தனது மனைவி ரெஜினாவுடன் சேத்துப்பட்டு பஸ் நிலையம் அருகே கடையில் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த பாதிக்கப்பட்ட நபர் பார்த்து தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10க்கும் மேற்பட்டவர்கள் தியாகராஜனை அவரது மனைவியுடன் பிடித்து அனக்காவூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தகவலறிந்து பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் அனக்காவூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் முறைப்படி புகாரை பெற்று தியாகராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஏலச்சீட்டு நடத்தி ரூ.74.50 லட்சம் மோசடி; நிதி நிறுவன அதிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்: செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Anakavoor ,Dinakaran ,
× RELATED மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த...