×

மாஜி மந்திரி ஒருவர் சேலம்காரரின் செல்போன் அழைப்புக்காக காத்திருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனிக்காரர் என்ற அணியே இருக்கக் கூடாது. அங்குள்ளவர்களை அப்படியே தூக்கிட்டு வாங்க என்று யார் யாருக்கு உத்தரவு போட்டிருக்காங்க…’’ என்று யார் யாருக்கு ஆர்டர் போட்டு இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்துல சமீபத்துல இலைக்கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்துச்சாம். இதுல கலந்துகிட்ட அந்த கட்சியின் விவிஐபி, நிர்வாகிகளிடையே கொஞ்சம் காட்டமா பேசினாராம். அதாவது, எதிரணியில இருக்கிறவங்க வீட்டுக்கே போய் பேசி நம்ம கட்சிக்கு இழுத்துக்கிட்டு வரணும். குறிப்பா திருச்சி மாநாட்டுக்கு சேலத்துல இருந்து யாரும் போயிடக்கூடாது, அப்படி போகணும்னு முடிவு எடுத்துள்ளவர்களுடன் பேசி, அவங்களை போக விடாமல் தடுக்கணும்னு சொன்னாராம். குக்கர் பார்ட்டியில உள்ளவர்களிடம் பேசி நம்ம பக்கம் அழைச்சிட்டு வரணும்னு சொன்னாராம். நம்ம கட்சியிலேயே அதிருப்தியில இருக்கிறவங்கள கரன்சியால குளிப்பாட்டுங்க. அதிருப்தியில உள்ள தொண்டர்கள், கிளை நிர்வாகிகளை நேரில் சந்திச்சி பேசி, அவங்க நம்ம அணியில இருந்து வெளியேறாம பார்த்துகிடணும்னு கடுமையா உத்தரவு போட்டிருக்காங்களாம். அட்ரஸ் இல்லாதவன், வேறு கட்சியில இருக்கிறவன அழைத்துவந்து சும்மா கணக்கு காட்டி கரன்சியை சுருட்டக் கூடாது. நீங்க கட்சியில சேர்த்த ஆட்கள் யாருன்னு, நான் ஆட்களை வைத்து கண்காணிப்பேன். ஏமாத்தினீங்கன்னு தெரிஞ்சா உங்களையும் தூக்கிருவேன்னாராம். உடனே களத்துல இறங்குங்கன்னு அதிரடியா ஆர்டர் வேற போட்டுருக்காராம் விவிஐபி… இதையடுத்து பலரும் கரன்சி மற்றும் பெட்டியோடு ஆட்களை பிடிக்க கிளம்பிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மந்திரி ஒருத்தருக்கு பெரிய பதவி கொடுப்பதா வாக்குறுதிய யாரு அள்ளி வீசியிருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடற்கரையோர மாவட்ட இலைக்கட்சியின் மாஜி மந்திரி, மாஜி எம்பியாக இருந்தவர் பெயரின் பின்னால் மன்னர் பெயர் கொண்டவர். இலைக்கட்சியில இரட்டைத்தலைமை இருந்தபோது, தாமரை கட்சியுடன் கூட்டணி சேர வேண்டாம். அதனால்தான் தொடர்ந்து தோற்கிறோம்னு தலைமையை எச்சரித்து வந்தாராம். அதே சாக்குல கட்சி தலைமையை கடுமையா விமர்சித்தும் வந்தாராம். பொறுத்து பார்த்த தலைமை, இவரை கட்சியிலிருந்து அதிரடியா நீக்கியது. ஆனாலும், தான் கட்சியில் இருப்பதாவே தொடர்ந்து பேசி வந்தார். இலைக்கட்சியில் இரட்டை தலைமை இரு வேறு திசையில் பயணித்ததால், சின்ன மம்மிக்கு ஆதரவாக பேசி வந்தார். இவரை இலை கட்சி மாநாட்டிற்கு தேனிக்காரர் ஏற்கனவே அழைத்திருந்தாராம். சுதாரித்த சேலத்துக்காரர், தனது தரப்பை சேர்ந்த முன்னாள் மந்திரியான மணியானவரை போய் சந்தித்து பேசுமாறு கூறினாராம். அவர் மன்னரானவரை சந்தித்து, எங்கள் அணிக்கு வந்தா குறைந்தது பெரும் தொகையுடன், மாநில பதவி, எம்பி சீட் எல்லாம் தருவதாக வாக்குறுதி அள்ளி வீசினாராம். இதில், தடுமாறி மன்னரானவர், பண்டிகை காலம் முடிந்ததும் பேசுங்க. நானும் நல்ல தகவல் சொல்கிறேன்னு சொன்னாராம். தற்போது பண்டிகை முடிந்த நிலையில், எப்படியும் அழைப்பு வருமென செல்போனையே குறுகுறுவென பார்த்தபடியே இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொதுமக்களிடம் வசூலை தட்டி எடுக்கும் கலெக்டர் அலுவலக அதிகாரி பற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை கலெக்டர் அலுவலகத்தில ஊரக வளர்ச்சி முகமை நேர்முக உதவியாளரா பணிபுரியும் ஒரு அதிகாரி, கிடைச்சவரை லாபம்னு காச அள்ளி குவித்து வருகிறாராம். இவர், ஏற்கனவே, உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) பொறுப்பையும் கூடுதலா கவனித்து வந்தவரு. இரண்டு அலுவலகத்திலும், ஊழியர்கள் இடமாற்றம் விவகாரத்தில் பெருமளவில் கரன்சி குவித்து விட்டாராம். இவர் பரிந்துரை செய்யும் பைல்களில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மறுக்காமல் கையெழுத்து போட்டு விடுவாராம். தனது கரன்சி வேட்டைக்கு, நம்பகமான ஓட்டுனர் ஒருவரையும், சில உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் உடன் வைச்சிருக்காராம். மாவட்டத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடப்பதாக கூறி வசூல் வேட்டையில் இறங்கி, கரன்சிய தட்டி எடுத்துட்டாராம். கோவை மாவட்டத்தில், சமீபத்தில் 84 ஊராட்சி செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதில், இவரது பங்களிப்பும், கரன்சி வேட்டையும் சாதனை படைத்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வைரலாகும் ஹாட் ஆடியோ’ குறித்து சொல்லுங்க என்றார்…’’ பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல உள்ள வாணி பாடிய ஊர்ல வட்ட அதிகாரி ஒருத்தர் இருக்காரு. இவரு ஒரு நபருக்கு போன் போட்டு, ‘நான் வட்ட அதிகாரி பேசுறேன். ஆபீஸ்லதான் இருக்கேன். இன்னும் அரை மணிநேரத்துல வருவேன். எனக்கு நிறைய செலவு வெச்சிருக்காங்க. ஒரு புரோகிரோம் ஒன்னு, சாப்பாடு, தண்ணீர் பாட்டில் செலவுன்னு இருக்குறதாக சொல்றாரு.’ அதற்கு எதிர்முனையில் பேசியவர், ‘ஆபிஸ்லயா இருக்கீங்க சார், ஒருத்தர் காசு தரணும் லைனுக்கு போய்ட்டு வர்றேன்’ன்னு சொல்றாரு. பின்னர் அவரே, ‘அண்ணா இந்த நம்பரா, இதே நம்பருக்கு பண்ணிடுறேன்னா, என் நம்பர்ல இல்ல.. வீட்டு நம்பர்ல இருந்து பண்ணிடுறேன். 11 மணிக்கு மெசேஜ் வந்துடும்னா, வந்தா நான் பண்ண மாட்டேன் நீங்களே எனக்கு போன் பண்ணுவீங்க அண்ணா’’ என்று முடியுற ஆடியோ மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல வைரல் ஆகிட்டு வருது. இதுல எதிர்முனையில பேசுன நபர் மணல் பிசினஸ் செய்றவராம். அவர்கிட்டதான் இந்த வட்ட அதிகாரி சம்திங் கேட்டிருக்குறதாக பேசிக்கிறாங்க. இந்த ஆடியோதான் மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல ஹாட் டாபிக்காக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பில் பாஸ் செய்ய பர்சண்டேஜ் கேட்கிறாங்களாமே அதிகாரிங்க…’’ அது எங்கன்னு கேட்டார் பீட்டர்மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல லி என்ற எழுத்துல முடியுற 3 எழுத்து ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல 47 கிராம பஞ்சாயத்துகள் வருது. இதுல திட்ட பணிகள் முடிந்தும், பில் தொகை வழங்குறதில்லையாம். இதனால புதுசா திட்ட பணிகள் தொடங்குறதுல சிக்கல் ஏற்பட்டிருக்குதாம். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும் ஒன்றியத்தோட அதிகாரிங்க பில் பாஸ் செய்ய மாட்டேங்குறாங்களாம். ஐந்து பர்சண்டேஜ் கொடுத்தால் தான் பாஸ் செய்ய முடியும்னு ஒத்தகால்ல நிற்குறாங்களாம் அதிகாரிங்க.. இதனால அரசு அறிவிச்ச கட்டிடப் பணிகள், நிதி இருந்தும் தொடங்க முடியாத நிலையில இருக்குதாம். இப்படி திட்டங்களுக்கு இடையூறாக இருக்குற அதிகாரிகள் மேல நடவடிக்கை எடுத்து, முடிந்த பணிகளுக்கு பில் பாஸ் செய்யணும். அதோட, புதிய பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’னு கோரிக்கை வேற எழுந்திருக்காமுன்னு சொல்லி முடித்தார் விக்கியானந்தா.

The post மாஜி மந்திரி ஒருவர் சேலம்காரரின் செல்போன் அழைப்புக்காக காத்திருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji minister ,Salemkar ,Yananda ,wiki ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...