×

காட்டுத்தீயை தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பு

ஊட்டி, ஏப்.17: நீலகிரியில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வனங்கள் மீண்டும் காய்ந்து காணப்படுவதால் வனத்தீ ஏற்படாதவாறு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடுமையான உறை பனி காரணமாக வனப்பகுதிகளில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்தன. கடந்த மாத துவக்கத்தில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டது. அதன் பின்னர், காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் காட்டு தீ அபாயம் தற்காலிகமாக நீங்கியது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. பனி சீசனின் போது மரங்கள், செடி கொடிகளில் இருந்து உதிர்ந்த இலைகள் காய்ந்து கொட்டி கிடக்கின்றன. இதனால் தற்போது நிலவும் வெயில் காரணமாக காட்டு தீ ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நீலகிரி வன கோட்டத்தில் 12 வனச்சரகங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வனங்களில் செடி கொடிகள் காய துவங்கி உள்ளன. இதனால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் யாரும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. குறிப்பாக சிகரெட் பற்ற வைக்க தீக்குச்சியை கொளுத்தும்போது அதை வனப்பகுதியில் தூக்கி வீசக்கூடாது. அதுபோன்று சிகரெட் துண்டுகளை வனப்பகுதியில் போடக்கூடாது. வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலை ஓரத்தில் தீ மூட்டி சமையல் செய்யக்கூடாது. கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு புல்வெளிகளை எரித்தால் அவை செழித்து வளரும் என்பதால் சிலர் செயற்கையாக வனங்களுக்கு, புல்வெளிகளுக்கு தீ வைக்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். வனத்தீ ஏற்படுத்துவோர் கண்டறியப்பட்டால் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post காட்டுத்தீயை தடுக்க வனத்துறை தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...