×

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மீனின் நெற்றி மட்டும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை

அறந்தாங்கி: மனிதர்களின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அபூர்வ மீனின் நெற்றி மட்டும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு நேற்று கரை திரும்பினர். அப்போது ஒரு மீனவர் வலையில் மிக அபூர்வமான மருத்துவ குணம் கொண்ட கூரல் மீன் சிக்கியிருந்தது. அந்த மீன் 24 கிலோ இருந்தது. இந்த கூரல் மீனின் நெற்றிப்பகுதி மருத்துவ குணம் கொண்டது. இந்த மீனின் நெற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

அங்கு இந்த மீனின் நெற்றியில் இருந்து எடுக்கப்படும் நூலை (நரம்பு) கொண்டு மனிதர்களுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யும் போது தையல் போடுகின்றனர். இதனால் இந்த மீனுக்கு கடும் கிராக்கி உள்ளது. இந்த மீன் நெற்றி 1 கிலோ ரூ.5 லட்சம் வரை விலை போகும். நெற்றி எடையை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போது சிக்கியுள்ள கூரல் மீன் நெற்றி ரூ.2 லட்சத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூரல் மீனில் ஆண், பெண் என வகை உள்ளது. ஆண் கூரல் மீனில் மட்டுமே நெற்றி இருக்கும். பெண் கூரல் மீனில் நெற்றி இருக்காது. இந்த மீனில் இருந்து நெற்றியை தனியே எடுத்த பிறகு, மீன் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இந்த மீனை மீன் வியாபாரி நவாஸ்கான் என்பவர் ஏலம் எடுத்தார். இந்த மீன் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1,500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

The post அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மீனின் நெற்றி மட்டும் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,
× RELATED கந்தர்வகோட்டையில் கூட்டுறவு வங்கி...