×

சிக்கென்ற உடலுக்கு…

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் பருமனாக இருந்தாலே இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தண்டுவட பாதிப்பு, கால் மூட்டு வலி, குதிகால் வலி போன்ற தொடர் நோய்களும், சமூகம் சார்ந்த மன உளைச்சலும் ஏற்படுகிறது.உடல் பருமனை தடுக்கும் உடற்பயிற்சி, உணவுப்பழக்க வழக்கங்கள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்த நமது கேள்விகளுக்கு மிக விளக்கமாக பதில் தந்துள்ளார் சித்த மருத்துவ நிபுணரான டாக்டர் Y.R.மானக்சாநமது உயரத்திற்கு ஏற்ற எடையினை எவ்வாறு கண்டறிவது?

நம்முடைய உயரத்தை சென்டி மீட்டரில் அளந்து, அதில் நூறைக் கழிக்க வருவதே நமது உடலின் எடையாக இருக்க வேண்டும். கூடுதலாக இருந்தால் உடல் பருமன்.
ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது BMI எனப்படும் பாடி மாஸ் இன்டெக்ஸ். இது 19க்கு கீழ் இருந்தால் உடலின் எடை குறைவு. 19 முதல் 24க்குள் இருந்தால் சரியான உடல் எடை. 24ல் இருந்து 30க்குள் இருந்தால் அதிக உடல் எடை. 30க்கும் மேலிருந்தால் அது உடல் பருமனைக் குறிக்கும் அளவு. ஆண்களுக்கான BMI 21 முதல் 25க்குள்ளும், பெண்களுக்கான BMI 18 முதல் 23க்குள்ளும் இருக்க வேண்டும்.

ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ அதாவது 37 அங்குலம் இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் இடுப்பு அளவு 80 செ.மீ அங்குலத்தில் 32 இருக்கலாம். இதற்கு அதிகமாக இருந்தல் அது அதிகரித்த உடல் பருமனைக் குறிக்கும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள் என்ன?

உடல் பருமன் என்றதுமே நொறுக்குத் தீனி, ஆயிலியான உணவு வகைகள், சோம்பலான வாழ்க்கை முறை, குறைவான உடல் உழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளே
நினைவுக்கு வரும். இவற்றைத் தாண்டியும் ஒருசிலருக்கு உடல் பருமன் ஏற்படும்.

* உடல் பருமனுக்கு பரம்பரையும் ஒரு காரணம். பெற்றோருக்கு உடல் பருமன் இருந்தால் மரபு ரீதியாக பிள்ளைகளுக்கும் வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

* தைராய்டு(Hypothyroidism) நோய் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும்.

* பெண்களுக்கு புரோலாக்டின்(prolactin), புரோஜெஸ்டிரான்(progesterone), ஈஸ்ட்ரோஜென் (estrogen) ஹார்மோன்களில் உள்ள குறைபாடு காரணமாக இயல்பாகவே உடல் பருமன்
அதிகமாகும்.

* மன அழுத்தம் அதைத் தொடர்ந்து வரும் மனச்சோர்வுகள், தூக்கமின்மை இவைகளுக்காக எடுக்கப்படும் மருந்துகள் (Depression, anxiety related psychiatric drugs) உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

* அதேபோல் சில steroids மருந்துகளினாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.

* மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் கலந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட டின் உணவுகளை அதிக அளவில் தொடர்ச்சியாக எடுப்பது.

* மதுபானங்களை தொடர்ச்சியாக உட்கொள்வது.

* நீண்ட நேரத் தூக்கம், குறைந்த நேர தூக்கம் மற்றும் பகல் நேர தூக்கமும் உடல் பருமனை உண்டாக்கும்.

உடல் பருமனால் தோன்றும் பக்க விளைவுகள்?

* நடக்கும்போது மூச்சு வாங்குதல்
* கால் மூட்டுகளில் வலி
* குதிகால் வலி
* அதீத உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்?

* நீரிழிவு நோய் எனப்படும் டைப் 2 சர்க்கரை வியாதி (Type 2 Diabetes)
* உயர் ரத்த அழுத்தம் (Hypertension) மற்றும் இதய நோய் (Heart disease)
* கால்களில் தோன்றும் நாள வீக்கங்கள் (Varicose veins)
* தூங்கும் போது குறட்டை விடல்
* திடீரென்று மூச்சு நின்றுவிடுவது போலிருத்தல்
* இருபாலருக்குமே குழந்தை பேற்றுக்கான இனப்பெருக்க குறைபாடுகள் தோன்றுதல்.

உடல் பருமனுக்கான தீர்வுகள்?

* தினமும் 10 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யலாம். அதாவது, காற்றோட்டம் நிறைந்த அமைதியான இடத்தில் அமர்ந்து இடது நாசி வழியாக காற்றை மெதுவாக உள்ளிழுத்து வலது நாசி வழியாக மெதுவாக வெளிவிட வேண்டும். இதே போல் வலது நாசியை பயன்படுத்தி செய்ய வேண்டும். தினமும் இதைச் செய்வதால் உடலில் உள்ள திசுக்களுக்கும் தேவையான ஆக்சிஜன் நுழைந்து தேவையற்ற மாசுக்கள், கொழுப்புகளை வெளியேற்றும்.

* மெதுவான நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து இவற்றில் ஏதாவது ஒரு விளையாட்டை காலை அல்லது மாலையில் விளையாடலாம். இதில் ஒரு மாதத்தில் சராசரியாக 2 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது.

* உணவில் தினமும் ஏதாவது ஒரு கீரை, கத்தரிக்காய், புடலங்காய், சுரக்காய், சுண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ், கோவைக்காய், பிரண்டை, கருணைக்கிழங்கு, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளில் ஒன்றை உணவாய் எடுக்க வேண்டும்.

* தேயிலையுடன் லவங்கப்பட்டை (cinnamomum bark) சேர்த்து குடிக்கலாம்.

* பூனை மீசையிலை (jawa tea) உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறப்பாக செயல்படும் என்பதால் இதை காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம்.

* தோல், விதை நீக்கிய வெண்பூசணி சாற்றை தினமும் காலையில் குடிக்கலாம்.

* சோற்றுக் கற்றாழை சாறில் (jelly) இஞ்சி, சிறிதளவு காயம் மற்றும் உப்பு சேர்த்து மோரில் அடித்துக் குடிக்கலாம்.

* நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நத்தைச்சூரி விதையினை, இளம் சூட்டில் வறுத்துப் பொடி செய்து காஃபி போன்று போட்டுப் பருகி வர, இது உடலில் இருக்கிற கெட்ட கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.

* ‘‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழிக்கு ஏற்ப கருப்பு, சிவப்பு, வெள்ளை கொள்ளுவில் ஏதாவது ஒன்றை எடுத்து, இத்துடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் குடிக்கலாம்.

* இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு, எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவற்றுடன் தேன் கலந்து காலை, இரவு சாப்பிட்டு வந்தால், கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும்.

* வெந்நீரில், எலுமிச்சம்பழச் சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் காலையில் குடிக்கலாம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

The post சிக்கென்ற உடலுக்கு… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED காலமறிந்து களம் காணும் மகரம்