×

மீஞ்சூர் அருகே புழுதி பறக்கும் சாலையால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள், வியாபாரிகள் சாலை மறியல்: சீரமைத்துத்தருவதாக எம்எல்ஏ உறுதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே புழுதி பறக்கும் சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள், வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

மழை ஓய்ந்த நிலையில், இந்த குண்டும், குழியுமான சாலையில் இருந்து தூசி பறப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் மேலும், ரமணா நகர், மீஞ்சூர் வியாபாரிகள் மாநில பொதுச் செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் மீஞ்சூர் சேக் அகமது, நகர தலைவர் புனித குமார், நிர்வாகிகள் மோகன், பாண்டி, கிரிராஜன், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் என இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், முறையாக சாலை அமைக்காததால் தூசி பறப்பதாகவும், வீடுகளில் உள்ள உணவு, குடிநீர் என அனைத்திலும் சாலையில் இருந்து வரும் மண் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சுவாச கோளாறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். தார் சாலையை சீரமைப்பதாக கூறி மண் சாலையாக மாற்றி விட்டதால் புழுதி பறப்பதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கேள்விபட்ட பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  அப்போது அவர், 1 மாத காலத்தில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். அவருடன் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி உடன் இருந்தார். ஆவடி சரக சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மீஞ்சூர், புங்கமேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்தரி, மேலூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இதனை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு நன்றி தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post மீஞ்சூர் அருகே புழுதி பறக்கும் சாலையால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள், வியாபாரிகள் சாலை மறியல்: சீரமைத்துத்தருவதாக எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,MLA ,Ponneri ,Meenjur ,Dinakaran ,
× RELATED விபத்தில் புள்ளிமான் உயிரிழப்பு