×

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ‘பைப் லைன்கள்’ நெல்லை தூத்துக்குடியில் இரவு பகலாக சீரமைக்கும் பணிகள் தீவிரம்

நெல்லை: கனமழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் குழாய்கள் பதித்து குடிநீர் சப்ளையை தொடங்க இரவு பகலாக உள்ளாட்சி அமைப்பினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த இடைவிடாத அதிக கனமழையும், அதைத் தொடர்ந்து தாமிரபரணி மற்றும் கிளை ஆறுகளில் ஏற்பட்ட பெரு வெள்ளம், குளங்கள் உடைப்பு ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கை புரட்டி போடப்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகை குடிநீர் திட்டம், தூத்துக்குடி மாவட்டம், பொன்னன்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகை குடிநீர் திட்டம், ஏரல் ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம், முறப்பநாடு குடிநீர் திட்டம், வல்லநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம், கல்லூர், சுத்தமல்லி தாமிரபரணி ஆறுகளில் அமைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் நெல்லை மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்று வௌ்ளத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் நிர்மூலமாகியுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வல்லநாடு-அகரம் கிராமத்திலிருந்து தான் தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பஞ்சாயத்து பகுதிகள், கருங்குளம் பஞ்சாயத்து யூனியன் விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 365 கிராமங்கள் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 17ம் தேதி தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து குடிநீர் குழாய்கள் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட சிறிய பாலங்கள் மீது மோதியது. இதனால் குடிநீர் குழாய்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அனைத்து திட்டங்களிலும் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்துள்ளதால் இந்த 3 மாவட்டங்களிலும் குடிநீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.குடிநீர் சப்ளையை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இரவு பகலாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் லாரிகள் செல்ல முடியாததால் அவர்களுக்கு சிறிய வேன்கள் அல்லது லோடு ஆட்டோக்களில் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ‘பைப் லைன்கள்’ நெல்லை தூத்துக்குடியில் இரவு பகலாக சீரமைக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Nella ,Tuthukudi ,Virudhunagar ,Tamiraparani ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து நெல்லை,...