மும்பை: பரேல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பரேல் மின்ட் காலனி மோனோரயில் நிலையம் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான சாய்பாபா பள்ளி செயல்பட்டு வருகிறது. 5 மாடிகள் கொண்ட இந்த பள்ளியின் தரை தளத்தில் நேற்று காலை திடீரென சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காஸ் சிலிண்டர் வெடித்தது போல் சத்தம் கேட்டதால் பள்ளிக்கு அருகில் இருந்தவர்கள் பதறி அடித்து வெளியே வந்து பார்த்தனர். பள்ளி கட்டிடம் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பின் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது. மகர சங்கராந்தியை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மின்சார பெட்டியில் ஏற்பட்ட கோளாறால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்ட அறையில் மெத்தைகள் இருந்ததால் அதன் மூலம் மற்ற இடங்களுக்கும் தீ பரவியதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
The post பரேலில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தீ விபத்து appeared first on Dinakaran.