×
Saravana Stores

நிதிநுட்ப நகரம் நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையில் அமையும் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம் மூலம் தமிழ்நாட்டில் 87 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தம்பாக்கத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் ரூ.116 கோடி மதிப்பீட்டில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக ரூ.254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன.

அதேபோல, தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினைக் கொண்டதாக இருக்கின்றது. அதேபோல், அனைவரையும் உள்ளடக்கிய நமது திராவிட மாடல் வளர்ச்சி பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடையவேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திடவேண்டியது அவசியம் என்பதை அரசின் கடமையாக நான் கருதுகிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில், ஏடிஎம்மில் பணம் எடுப்பதைவிட, கைபேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரயும் இது இன்னும் சென்றடையவில்லை என்று சொன்னாலும், எதிர்காலத்தைக் கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்கவேண்டும். தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

அதேபோல, பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என நான் உறுதியாக நம்புகிறேன். நிதிநுட்பத்தொழில் சூழலமைப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இங்கு அமையப் பெற்றுள்ள நிறுவனங்களே சாட்சி. அதன்படி, படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக் கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனை நாம் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். இதனை, அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, நமது இளைஞர்களின் திறன்களை வளர்த்து, முன்னேறுவதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

அதன் ஒரு பகுதியாகத்தான், ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். நிதிநுட்பத்துறை முதலீடுகளை மதிநுட்பத்துடன் ஈர்க்க, நாங்கள் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல, வரக்கூடிய 2025ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021 என்ற சிறப்புக் கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்றக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னையில் ஒரு நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். நிதிநுட்ப நகரத்தில், இந்திய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துத்தர இருக்கின்றோம்.

சென்னை மாநகரத்தின் மையப்பகுதியான நந்தம்பாக்கத்தில், 56 ஏக்கர் நிலத்தை, இதற்கென ஒதுக்கி இருக்கிறோம். இதன்மூலம், நிதிநுட்பத் துறையில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதேபோல, இங்கு 5.6 லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு நிதிநுட்ப கோபுரம் ஒன்றை அமைக்கவுள்ளோம். இதன்மூலம், ரூ.1000 கோடிக்கும் மேலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஏறக்குறைய 7 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களான நிதிச்சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் அதனுடைய மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசு, செஞ்சி மஸ்தான், டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஜெய முரளிதரன், செயல் இயக்குனர் ஜெயசந்திர பானு ரெட்டி மற்றும் பல்வேறு நாடுகளை சார்ந்த தூதர அதிகாரிகள், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post நிதிநுட்ப நகரம் நிதிநுட்ப கோபுரம் மூலம் 87 ஆயிரம் பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nititechnik City ,Nititechnik Gopuram ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,
× RELATED பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு