×

கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள்; நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து பேரிடர் நிதியைத்தான் கேட்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ள பாதிப்புக்காக தமிழக அரசு நிவாரண நிதி கேட்டால், ‘‘நாங்கள் என்ன ஏடிஎம்மா..’’ என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்’’ என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சருடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள்; நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Union Finance ,Dinakaran ,
× RELATED அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12%...