×

‘கிளீன் சேவ்’ பண்ண சொன்னா ‘டிரிம்’ பண்ணிட்டா வர்ற… ‘தாடி’ வெச்சது குத்தமாய்யா… திருமணத்தை நிறுத்திய தந்தை: வருங்கால பொண்டாட்டி பேச்சை கேட்ட மகனை விடியவிடிய வீட்டு வாசலில் நிற்க வைத்து ‘பனிஷ்மென்ட்’

சூலூர்: காதல் தோல்வியால் தாடி வளர்ப்பவரை பார்த்துள்ளோம். ஆனால் தாடியால் திருமணம் நின்ற கதை கோவையில் நேற்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர்கள் 2 பெரிய தொழில் அதிபர்கள். இவர்களது மகன், மகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது. அதன்படி இருவரும் நேற்று முறைப்படி சம்பந்தியாகி இருக்க வேண்டும். ஆனால் மாப்பிள்ளையின் தாடியால் திருமணமே நின்று போயிருக்கிறது. திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு மணமகனை அழைத்த தந்தை, ‘‘நல்ல நெகு நெகுவென்று சேவிங் செய்துவிடு’’ என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து சலூன் கடைக்கு மணமகன் சென்றார். அந்த நேரத்தில் மணப்பெண்ணிடம் இருந்து மணமகனுக்கு போன் வந்தது. அப்போது தாடியை சேவ் செய்ய சலூன் கடைக்கு போவதாக மணமகன் கூறியிருக்கிறார். அதற்கு மணப்பெண், ‘‘சேவ் செய்ய வேண்டாம். உங்களுக்கு சிறிய அளவில் தாடி இருந்தால் மிக அழகாக இருக்கும்’’ என்று கூறினார். வருங்கால மனைவியின் ஆசைப்படியே மணமகன் தாடியை ‘சேவ்’ செய்யாமல் ‘டிரிம்’ மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அன்று இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மணமகனின் தந்தை வந்தார்.

மகன் தாடியை ‘சேவ்’ செய்யாததை பார்த்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ‘‘தாடியை ஏன் சேவிங் செய்யவில்லை?’’ என்று கோபமாக கேட்டார். அதற்கு மணமகன், சிறிய அளவில் தாடி இருப்பது மணப்பெண்ணுக்கு பிடித்துள்ளதாக கூறி தந்தையை சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் அதனை தந்தை கேட்பதாக இல்லை. தனது விருப்பத்தில் அடம் பிடித்தவராகவே பேசினார். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த தந்தை மகனை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு கதவை பூட்டிக்கொண்டார். அன்று இரவு விடிய விடிய மணமகன் வெளியிலேயே நின்றிருக்கிறார்.

அடுத்த நாள் தகவல் அறிந்ததும் மணப்பெண்ணின் தந்தை அங்கு வந்து வருங்கால சம்பந்தியிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர், ‘‘எனது மகன் உங்களுக்கு ஒத்து வரமாட்டார். இந்த திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை’’ என்று கூறிவிட்டார். அதோடு நிற்காமல் சமூக வலைத்தளத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று பதிவிட்டார். இந்த தகவல் உறவினர், நண்பர்களுக்கு தெரியவந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதும் மணமகனின் தந்தை சமரசம் அடையவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த திருமணம் நின்றே போனது. எவ்வளவோ காரணங்களால் திருமணம் நின்றிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தாடியால் திருமணம் நின்ற சம்பவம் கொஞ்சம் ‘ஓவர்’தான் என்று அந்த பகுதி மக்கள் கூறி வியப்படைந்தனர்.

The post ‘கிளீன் சேவ்’ பண்ண சொன்னா ‘டிரிம்’ பண்ணிட்டா வர்ற… ‘தாடி’ வெச்சது குத்தமாய்யா… திருமணத்தை நிறுத்திய தந்தை: வருங்கால பொண்டாட்டி பேச்சை கேட்ட மகனை விடியவிடிய வீட்டு வாசலில் நிற்க வைத்து ‘பனிஷ்மென்ட்’ appeared first on Dinakaran.

Tags : Sulur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்