×

பறவைகளிடமிருந்து பாதுகாக்க பசுமை குடில்களில் பட்டாணி செடிகள் வளர்க்கும் விவசாயிகள்

ஊட்டி : பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்க பசுமை குடில்களில் பட்டாணி செடிகள் வளர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உருளைக்கிழங்கு,பட்டாணி,கேரட்,பீட்ரூட்,முள்ளங்கி,முட்டைகோஸ்,பீன்ஸ் உட்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகிறது.இதில், ஊட்டி பட்டாணி மிகவும் பிரபலமானது. ஊட்டி பட்டாணி என்றாலே இனிப்பு சுவை அதிகமாக இருக்கும்.இதனால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இதற்கு கிராக்கி அதிகம். சாதாரணமாக டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பட்டாணியை காட்டிலும் எப்போதும் ஊட்டி பட்டாணிக்கு விலை அதிகமாக இருக்கும்.

ஆனால்,கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பட்டாணி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. காரணம்,பறவைகள் மற்றும் விலங்குகளின் தொல்லை.குறிப்பாக பறவைகளின் தொல்லை அதிகமாக காரணத்தினால் பட்டாணி பயிரிடுவதை விவசாயிகள் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.இங்கு, விவசாய நிலங்களில் பட்டாணி பயிரிட்டால் பட்டாணி செடிகளில் பூக்கும் மலர்களை குருவிகள் கொத்தி தின்றுவிடுகின்றன.அதனையும் தாண்டி பட்டாணி விளையும் போது குரங்குகள், காட்டுப்பன்றிகள் உட்கொள்கின்றன. இதனால், பட்டாணி செடிகளை பாதுகாப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியது.

எனவே, பெரும்பாலான பகுதிகளில் பட்டாணி பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்போது பசுமை குடில்களில் பட்டாணி பயிரிடுவதை துவக்கி உள்ளனர். பசுமை குடில்களில் பட்டாணி செடிகள் வளர்ப்பதன் மூலம் பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து முழுமையாக பாதுகாக்க முடியும்.மேலும், பட்டாணி செடிகளை நோய் தாக்காமலும் காப்பாற்ற முடியும் என்பதால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில விவசாயிகள் பசுமை குடியில்களில் பட்டாணி செடிகளை பயிரிடுவதில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி அருகேயுள்ள கொதுமுடி பகுதியில் தற்போது விவசாயிகள் பசுமை கூடில்களில் பட்டாணி வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.பசுமை குடில்களில் பட்டாணி செடிகள் வளர்ப்பதன் மூலம் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம் விலங்குகளிடம் இருந்தும் மற்றும் பறவைகளிடம் இருந்தும் பாதுகாக்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

The post பறவைகளிடமிருந்து பாதுகாக்க பசுமை குடில்களில் பட்டாணி செடிகள் வளர்க்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Ooty… ,Dinakaran ,
× RELATED சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்