×

முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.3 கோடி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவித் தொகையை வழங்கினார். தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்கிட 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் சிறையிலிருந்து முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயதொழில் தொடங்கிட 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

இந்திய சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக, 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை பெற்று வருபவர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுத்து, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில், சுயதொழில் தொடங்கிட தேவையான நிதி உதவிகளை வழங்குவதே இச்சங்கத்தின் குறிக்கோளாகும். சிறை மீண்டோர் நலச்சங்கம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, அவர்கள் கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட 3 கோடியே 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசோலைகளை வழங்கினார். இதன்மூலம், விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கிட வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.அமரேஷ் புஜாரி, இ.கா.ப., சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் திரு.ஆ.முருகேசன், தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் திரு. பி. சிவபிரசாத், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்க கெளரவ பொருளாளர் திரு.எஸ்.ஞானேஸ்வரன் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.3.3 கோடி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Raja Annamalai Forum ,Tamil Nadu ,Jail… ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...