×

ரூ.3.15 கோடி கூட்டுறவு சங்க மோசடி விவகாரத்தின் திரைமறைவு வேலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘திரைமறைவில் இலை கட்சி கிளைசெயலாளரு செய்த லீலை அம்பலமாகி இருக்காமே…’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றில் ரூ.3.15 கோடி மோசடி நடந்தது அம்பலமாகி இருக்கு. இந்த மோசடியில் ஈடுபட்டதா கூறி சங்கத்தின் முன்னாள் செகரட்டரி, மேனேஜர் உள்ளிட்ட 4 பேர் அரெஸ்ட் ஆகியிருக்காங்க. இது ஒரு புறமிருக்க, இலைகட்சி ஆட்சியில நடந்த இந்த மோசடியும், அதன் பின்புலத்தில் நடந்த திரைமறைவு வேலைகளும் இப்போ வெட்டவெளிச்சமாகி இருக்காம். இலை கட்சிய சேர்ந்த கிளைச்செயலாளரின் மனைவி தான், இந்த சங்கத்துக்கு தலைவராக இருந்தாராம். அப்போது தனது செல்வாக்கை பயன்படுத்தி கிளைச்செயலாளரு தான், சங்கத்தில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தாராம். இதையெல்லாம் கண்டிச்சு உள்ளூர் மக்கள், ஏராளமான போராட்டங்களையும் நடத்துனாங்களாம்.

சேலத்துக்காரருக்கு ரொம்ப நெருக்கமானவரா காட்டிக் கொள்ளும் இந்த கிளைச்செயலாரு, இதனால் ரொம்பவே ஆடிப்போயிட்டாராம். இதற்கிடையில் பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி ேகசை முடிப்பதற்கு ேபரமும் நடந்ததாம். இதற்கு பலனாக இப்போது கிளைச்செயலாளரு, சங்கத்தின் தலைவரான அவரது ஒய்ப் என்று எந்த பெயரும் மோசடியில் வெளியில் கசியாமல் போயிருக்காம். மொத்த மோசடியும் முன்னாள் செகரட்டரி மற்றும் ஊழியர்கள் மீது பாய்ஞ்சிருக்காம் என்ற தகவலை கசியவிட்டிருக்காங்க விவரம் அறிந்த உள்ளூர் பப்ளிக்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நிர்வாகிகளுடன் ஆலோசனையில் பொதுக்கூட்டத்திற்கு அதிகளவு கூட்டத்தை அழைத்து வர சேலத்துக்காரர் உத்தரவு போட்டிருக்கிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் கை ஓங்கியிருப்பதால் முதல்முதலாக நெற்களஞ்சிய மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் வராததால ஆதரவாளர்கள் மீது சேலத்துக்காரர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். மலைக்கோட்டை மாவட்டத்தில் கடந்தவாரம் சேலத்துக்காரர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக வந்த சேலத்துக்காரர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது மலைக்கோட்டை முக்கிய நிர்வாகிகளுடன் சேலத்துக்காரர் மணிக்கணக்கில் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, தூங்கா நகரத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முரமா நடந்து வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பெரிய அளவில் கூட்டம் காட்ட வேண்டும்.

நெற்களஞ்சிய மாவட்டத்தில் கூட்டம் வந்தது போல் இருக்க கூடாது. மலைக்கோட்டை மட்டுமல்லாமல் மத்திய மண்டலம் முழுவதில் இருந்து அதிகளவு தொண்டர்களை அழைத்து வர வேண்டும். இதற்காக ‘விட்டமின் ப’ எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான பொறுப்பை மலைக்கோட்டையை சேர்ந்த மாஜி எம்பியிடம் சேலத்துக்காரர் ஒப்படைத்துள்ளார். அதற்கு மாஜி எம்பியும், டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காலையில் வரும்போது சிங்கிளா வந்து, மதியத்தில் டபுள்ஸ் ஆகிடுறாங்களாமே ஆபீசர்ஸ்..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல சத்தான ஏரியாவுல இருக்குற ரூரல் டெவலப்மெண்ட் ஆபிஸ்ல, தரைத்தளத்துல தணிக்கை பிரிவு இயங்கி வருது.

இந்த தணிக்கை பிரிவுல ஏழுமலையான் பெயரை கொண்டவரு பணியாற்றி வர்றாராம். இவரு, காலையில ஆபிசுக்கு டிப்டாப் ஆக வர்றாராம். மதிய நேரம் ஆச்சுன்னா டபுள்ஸ்ல போதையில இருக்காராம். வரும்போது ஜூஸ் பாட்டில்லயே கலந்து கொண்டுவர்றாராம். பையில வெச்சிகிட்டு அப்பப்ப, ஆபிஸ்லயே போட்டுக்குறாராம். இங்க மட்டும்தான் இப்படி நடக்குதுன்னு பார்த்தா.. அதே சத்தான ஏரியாவுல ஏழுமலையானின் மற்றொரு பெயரை கொண்ட டிராபிக் காக்கி ஒருத்தரும் டியூட்டி நேரத்துல போதையிலத்தான் இருக்காராம். இவரு வரும்போதே மிக்சிங்கோடத்தான் வர்றாராம். ரோட்ல, போதையில போறவங்களை பிடிச்சு கேஸ் போடச்சொன்னா இவரே போதையில இருக்காரேன்னு புகார் குரல் ஒலிக்குது.

இப்படி ரெண்டு டிபார்மெண்ட்லயும், வரும்போது சிங்குளா வந்து, டபுள்ஸ் ஆக மாறிவரும் ஆபிசர்ஸ் மேல, ஹெவி ஆக்‌ஷன் எடுக்கணும்னு அந்த டிபார்ட்மெண்ட்ல இருந்தே கோரிக்கை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஏர்போர்ட்டில் நடந்த ரகளையை பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலம்காரரும், தேனிக்காரரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர். இருவரும் எதிரும், புதிருமாக உள்ளனர். அது மட்டுமல்லாது சமீபத்தில் இனி இருவரும் ஒன்று சேர வாய்ப்பே இல்லை எனவும் தேனிக்காரர் அறிவித்தார். ஆனால் சேலம்காரர் தமிழ்க்கடவுளை வழிபட முத்துநகர் விமான நிலையத்திற்கு வந்திருந்தாராம்.

அப்போது அணி பேதமின்றி தேனிக்காரர் ஆதரவாளர்களும் சேலம்காரரை வரவேற்க வந்திருந்தனராம். என்னடா… இது புது குழப்பமா இருக்கே…என சேலம்காரர் அணியினர் எண்ணினார்களாம். கடைசியில் தேனிக்காரர் அணியினரை சேலம்காரர் அணியினர் ரவுண்டு கட்டி விட்டார்களாம். இதனால் விமான நிலைய வளாகமே பரபரப்பானதாம். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தற்செயலாக இதை பார்த்து, உங்க குடுமிப்பிடி சண்டையெல்லாம் ஏர் போர்ட்டிற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்க…. எனக் கூறி விலக்கி விட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post ரூ.3.15 கோடி கூட்டுறவு சங்க மோசடி விவகாரத்தின் திரைமறைவு வேலையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Peter ,Selathukar ,Yananda ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...