×

இங்கிலாந்தை சுருட்டி வீசி அரையிறுதிக்கு தகுதி; இந்த உலககோப்பையில் சிறந்த பவுலிங் அட்டாக் எங்களிடம் உள்ளது: கேப்டன் ரோகித்சர்மா பெருமிதம்

லக்னோ: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நேற்று நடந்த 29வது லீக் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித்சர்மா 87 ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 34.5 ஓவரில் 129 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.இதனால் 100 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பவுலிங்கில் ஷமி 4, பும்ரா 3 விக்கெட் எடுத்தனர். ரோகித்சர்மா ஆட்டநாயகன் விருதுபெற்றார். 6 போட்டியிலும் வென்ற இந்தியா பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: நெருக்கடியான நேரத்தில் அனைத்து அனுபவ வீரர்களும் சரியான நேரத்தில் முன் நிற்கிறார்கள். முதல் 5 ஆட்டங்களில் நாங்கள் சேசிங் செய்து வெற்றிபெற்றோம். ஆனால் இன்று முதலில் பேட்டிங் செய்துள்ளோம். இங்கிலாந்து சிறப்பாக பந்துவீசியது எங்களுக்கு சவாலாக அமைந்தது. ஆனால் எங்களை பொறுத்தவரை, இந்த பிட்சில் சவால் அளிக்க தேவையான ஒரு ஸ்கோர் அடிக்கவேண்டும் என்பது தான் திட்டமாக இருந்தது. எங்களின் பேட்டிங் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை.

அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்தது சாதாரண சூழல் இல்லை. இதுபோன்ற நேரத்தில், பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். அதனை அமைக்க முடிந்தாலும், சரியாக முடிக்க முடியவில்லை. நான் உட்பட சில வீரர்கள் சொதப்பிவிட்டோம். எனது பேட்டிங் பொறுத்தவரை ஷாட்டிற்கு ஏற்ற பகுதிகளில் பந்துவந்தால்நிச்சயம் வாய்ப்பை பயன்படுத்துவேன். அப்படிதான் எதிரணி பவுலர்கள் மீது அழுத்தம் கொடுக்க முடியும். இன்று 30 ரன் குறைவாக தான் எடுத்தோம். ஆனால் பந்துவீச்சு அசாதாரணமாக இருந்தது. இப்படியொரு பந்துவீச்சை ஒவ்வொரு நாளும் பார்க்க முடியாது.

ஆரம்பத்திலேயே 2 விக்கெட் விரைந்து வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இருப்பதால், நிச்சயம் அவர்கள் மீது பந்தயம் கட்டலாம். சூழலுக்கு தகுந்தவாறு பவுலிங் செய்து மிரட்டி விட்டனர். இந்த பிட்சில் ஸ்விங்கும் இருந்தது. பிற்பாதியில் ஸ்பின்னும் இருந்தது. சரியாக அந்த இடத்தில் பிட்ச் செய்தார்கள். உலகக்கோப்பை தொடரின் சிறந்த பவுலிங் அட்டாக் எங்களிடம் உள்ளது என்று சொல்ல முடியும்.

2 சிறந்த ஸ்பின்னர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். கூடுதலாக அவர்களுக்கு இணையான வீரர்களும் பெஞ்சில் இருக்கிறார்கள். ஆனால் போதுமான இலக்கை எட்டிய பின், பந்தை பவுலர்களிடம் கொடுத்தால், நிச்சயம் அவர்களால் மேஜிக் செய்ய முடியும், என்றார். இந்தியா அடுத்ததாக வரும் வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் இலங்கையுடன் மோத உள்ளது.

சாம்பியன் டிராபிக்காவது தகுதி பெற வேண்டும்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ்பட்லர் கூறியதாவது: தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. 230ரன்னில் இந்தியாவை கட்டுப்படுத்தியதால் எளிதான சேசிங் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் மீண்டும் பழைய கதையே தொடர்ந்தது. இது எங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. பொதுவாக எந்த வழியில் விளையாட விரும்புகிறீர்களோ தைரியமாக அதே வழியில் தொடர்ந்து ஆட வேண்டும். அதில் எப்பொழுதும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

எங்களுடைய பிரச்னை என்னவென்றால் திட்டங்களை செயல்படுத்துவதில்தான் இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் பவர் பிளேவில் ஒரு சிறந்த தொடக்கத்தை கொண்டு வந்தனர். ஓரளவு ஸ்விங் கிடைத்தது. மைதானம் பீல்டிங் செய்யவும் நன்றாக இருந்தது. ஆனால் பேட்டிங் செய்த விதத்தில் பந்துவீச்சாளர்களின் உழைப்பை வீணடித்து விட்டோம். சாம்பியன்ஸ் டிராபிக்கு முதல் 7 இடங்களில் வரும் அணி தான் தகுதி பெற முடியும் என்றுதெரியும். இன்னும் எங்களுக்கு போட்டி இருக்கிறது, என்றார்.

The post இங்கிலாந்தை சுருட்டி வீசி அரையிறுதிக்கு தகுதி; இந்த உலககோப்பையில் சிறந்த பவுலிங் அட்டாக் எங்களிடம் உள்ளது: கேப்டன் ரோகித்சர்மா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : England ,World Cup ,Rohit Sharma ,Lucknow ,India ,29th ,Cricket World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில்...