×

இயந்திர கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் தாமதம்: பயணிகள் போராட்டம்

சென்னை: ஏர் இந்தியா விமானம், இயந்திர கோளாறு காரணமாக தாமதம் ஆனதால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் தினமும் புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை வந்து சேரும். பிறகு சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 11.30 மணிக்கு புறப்படும். வழக்கம் போல் நேற்று அந்த விமானம் 5 நிமிடம் முன்னதாகவே காலை 10.55 மணிக்கே, மும்பையில் இருந்து சென்னை வந்தது. மும்பையில் இருந்து நேரடியாக மதுரை செல்ல 42 பயணிகளும், சென்னையில் இருந்து செல்ல 76 பயணிகளும் என, 118 பேர் தயாராக இருந்தனர்.

ஆனால் இயந்திர கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமானம் தாமதமாக பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் காத்திருந்தனர். பிற்பகல் 2 மணி ஆகியும் விமானம் பழுது பார்க்கும் பணி முடிவடையவில்லை. எனவே, விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் வந்து பயணிகளை சமரசம் செய்தனர். பிறகு அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 3 மணிக்கும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து விமானத்திற்கு உள்ளேயே பயணிகள் கோஷமிட்டு, போராட்டம் நடத்தினர். ஆவேசம் அடைந்த அவர்கள் டிக்கெட்களை ரத்து செய்து, அனைவரையும் விமானத்தை விட்டு கீழே இறக்கி விடுங்கள். வேறு விமானங்களில், அல்லது சாலை வழியாக காரில் மதுரை சென்று விடுவோம் என்று கூச்சலிட்டனர். பின்னர் ஒருவழியாக, சுமார் 4 மணி நேரம் தாமதமாக மாலை 3.30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது.

The post இயந்திர கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் தாமதம்: பயணிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Air India ,CHENNAI ,Mumbai… ,Dinakaran ,
× RELATED பயணியின் உணவில் பிளேடு இருந்தது உண்மை தான்: உறுதி செய்தது ஏர் இந்தியா