×

40 சதவீத கமிஷனில் டபுள் இஞ்சின் அரசுக்கு தலா எவ்வளவு கிடைத்தது?..பிரதமருக்கு ராகுல் கேள்வி

பெங்களூரு: கர்நாடகாவில் 40 சதவீத கமிஷனில் டபுள் இஞ்சின் அரசுக்கு தலா எவ்வளவு கிடைத்தது என்று பிரதமர் மோடி பதில் சொல்ல முடியுமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலம் ஆனெக்கல்லில் ராகுல்காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: கர்நாடகாவில் கிடைத்த 40 சதவீதம் கமிஷனில் டபுள் இஞ்சின் அரசுக்கு தலா எவ்வளவு பங்கு என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். நான் நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி எழுப்பியதால் எனது எம்பி பதவியை பிரதமர் மோடி பறித்தார். கர்நாடகாவில் இருந்து உங்களுக்கு கிடைத்த கமிஷன் எவ்வளவு என்று மாநில மக்களுக்கு சொல்லுங்கள்.

ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு 40 சதவீத கமிஷன் குறித்து கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. கர்நாடக எஸ்ஐ ஆட்சேர்ப்பில் முறைகேடு, உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் லஞ்சம், உதவி இன்ஜினியர்கள், கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தில் முறைகேடு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மைசூர் சேண்டல் முறைகேட்டில் பாஜ எம்எல்ஏ மகன் ரூ.8 கோடி பணத்துடன் சிக்கினார். அதே போல் ரூ.2500 கோடிக்கு பாஜவில் முதல்வர் பதவி விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடகாவில் ஊழல் நடப்பது 6 வயது குழந்தைக்கும் தெரியும். ஆனால் பிரதமர் மோடி, தன்னை காங்கிரஸ் 91 முறை அவதூறாக பேசியது என்று கணக்கிடுகிறார்.

கர்நாடக ஊழலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று முதலில் சொல்லுங்கள். எத்தனை விசாரணை நடந்தது. எத்தனை பேர் சிறையில் உள்ளார்கள். கர்நாடகாவில் டபுள் இஞ்சின் அரசு தான் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். கவுதம் அதானியுடன் உங்களுக்கு என்ன தொடர்பு. இதை நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். உடனே என்னை எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்துவிட்டார்கள். ஊழலை பற்றி கேட்டதால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். ஆனால் ஊழல் வாதிகளுக்கு எதிராக பிரதமர் பேசமாட்டார். 3 ஆண்டுக்கு முன்பு கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த அரசு கொள்ளை அரசு.

திருட்டு வழியில் ஆட்சிக்கு வந்தவர்கள். திருடத்தான் செய்வார்கள். திருட்டை தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது. பாஜவில் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பேச விடமாட்டார்கள். பசவராஜ் பொம்மை, எடியூரப்பா இருவரும் ஊழல்வாதிகள். மணிப்பூரில் வன்முறைக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பிரதமருக்கும், ஒன்றிய உள்துறை அமைச்சருக்கும் அதுபற்றி கவலையில்லை. மணிப்பூர் வன்முறை வெறுப்பு அரசியலால் நடந்தது. அதனால் தான் வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஒற்றுமை பயணம் நடத்தினேன்’. இவ்வாறு அவர் பேசினார்.

The post 40 சதவீத கமிஷனில் டபுள் இஞ்சின் அரசுக்கு தலா எவ்வளவு கிடைத்தது?..பிரதமருக்கு ராகுல் கேள்வி appeared first on Dinakaran.

Tags : double engine government ,Rahul ,Bengaluru ,Karnataka ,PM Modi ,
× RELATED ராகுல் வழக்கு 7ல் விசாரணை