×

எதிரிகளின் தொல்லை போக்குவாள் ஸ்ரீமத் சிம்ஹாஸனேஸ்வரி

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

3. ஸ்ரீமத் சிம்ஹாஸனேஸ்வரி

யாரால் இந்த உலகம் சிருஷ்டி செய்யப்பட்டதோ அவள் ஸ்ரீமாதாவாகவும், அப்படி சிருஷ்டிக்கப்பட்டதை எவள் ஆள்கிறாளோ அவளே மகாராக்ஞி என்றழைக்கப்படும் மகாராணியாகவும் இருக்கிறாள். அவளே, இப்போது பிரபஞ்சத்தை அடக்கி ஒடுக்கி அழித்தல் என்கிற காரியத்தையும் செய்கின்றாள். அவளையே லலிதா சஹஸ்ரநாமம் ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி என்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் அரசன் அமரும் இடம் சிம்மாசனம். அந்த அரசனே ஒரு நாட்டை உருவாக்குகின்றான். அதில் வசிக்கும் மக்களை பரிபாலிக்கின்றான்.

அப்படி பரிபாலிக்கும்போது அந்த மக்களை அடக்கியும் ஒடுக்கியும் வைக்கின்றான். மேலும், எதிரி நாட்டுப்படைகள் வரும்போது அவர்களை அழிக்கவும் செய்கின்றான். இப்படி ஒரு அரசன் செய்யும் காரியத்தையே பிரபஞ்சம் முழுவதிலும் அம்பிகை நிகழ்த்துகின்றாள். அரசன் அமரும் இடத்திற்கு சிம்மா
சனம் என்று பெயர். விலங்குகளில் சிங்கமே உயர்ந்தது. எனவேதான், அரசன் அமரும் ஆசனத்தை சிங்கம் போன்ற உருவங்களின் மேல் வைக்கின்றார்கள். பிரபஞ்சம் என்கிற சாம்ராஜ்ஜியத்தை அடக்கி ஒடுக்கி ஆள்வதால் பிரபஞ்ச சாம்ராஜ்ஜிய லட்சுமியோடு கூடிய சிம்மாசனத்திற்கு ஈஸ்வரியாக அவள் விளங்குகின்றாள்.

மேலும், இவள் சிம்மத்தையே வாகனமாகவும் கொண்டிருக்கிறாள். எனவே, சிம்மவாஹினி என்றழைக்கப்படுகின்றாள். ஏனெனில், தேவி மகாத்மியத்தில் சிம்மத்தின் மீது அமர்ந்து மகிஷன் என்கிற அரசனை அழித்தாள். அதனால், இவள் மகிஷக்னீ என்றும் அழைக்கப்படுகின்றாள். இப்போது வேறொரு கோணத்திலும் இதை நாம் பார்க்கலாம். ஸிம்ஹம் என்கிற சொல்லானது ஹிம்ஸ் என்கிற வினைச் சொல்லிலிருந்து உண்டானது. இந்த ஹிம்ஸ் என்ற வார்த்தையே சிம்ஹ என்கிற திரிபை அடைந்திருக்கின்றது.

ஹிம்ஸ் என்றால் அழித்தல், சம்ஹாரம் என்கிற பல்வேறு பொருளில் அழைக்கப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் ஹிம்சானேஸ்வரியே சிம்மாசனேஸ்வரியாகி பிரபஞ்சம் முழுவதும் அழித்தல், சம்ஹாரம் என்கிற காரிய ரூபத்தில் திகழ்கிறாள். இந்த சிம்மாசனம் சாதாரணமானதல்ல. இது வெறும் அழித்தல் மட்டுமல்ல. மாற்றத்தையும் செய்யும். வாழ்வில் நம் நிலையை மாற்றி உயர்நிலையையும் காட்டவல்லதாகும். எப்படியெனில், தேவிக்கு செய்யப்படும் பூஜையில் முக்கியமானது நவாவரண பூஜை என்பது முக்கியமானதாகும்.

இந்த பூஜையின் முடிவில் ஸ்ரீசக்ரத்தின் உச்சியில் பிந்துவின் மீது ஐந்து படிகள் உள்ளதான சிம்மாசனம் ஒன்றை பாவனை செய்து கொள்ள வேண்டும். இந்த ஐந்து படிகளில் ஒவ்வொன்றிலும் வாயு, ஈசானன், அக்னி, நிருரிதி போன்ற திக்குகளிலும் மத்தியிலுமாக ஐந்தைந்து தேவியின் வடிவுகள் பூஜிக்கப்பட வேண்டும். இதற்கு பஞ்ச பஞ்சிகா என்று பெயர். அவற்றில் முதல் படியில் ஸ்ரீவித்யா லட்சுமி, லட்சுமி லட்சுமி, மகாலட்சுமி லட்சுமி, திரிசக்தி லட்சுமி, சர்வ சாம்ராஜ்ய லட்சுமி என்று ஐந்து லட்சுமி தேவதைகள் அதில் உறைகின்றார்கள்.

இப்படி ஐந்தைந்து லட்சுமி தேவதைகள் உறையும் சிம்மாசனமாக இருப்பதால் ஸ்ரீஎனும் லட்சுமியோடு கூடிய ஸ்ரீமத் சிம்மாசனேஸ்வரியாக இவள் திகழ்கின்றாள். இதுதவிர சிம்மாசனம் என்று பெயர் கொண்ட மந்திரங்கள் உண்டு. இந்த மந்திரங்களை ஸ்ரீசக்ர பிந்து ஸ்தானத்தின் நான்கு புறங்களிலும், நடுவினிலும் பாவனை செய்து கொள்ள வேண்டும். கிழக்கில் பாலா, சைதன்ய பைரவீ, ஸம்பத்ப்ரதா பைரவீ என்று மூன்று. தெற்கில் காமேச்வரீ, ரக்தநேத்ரா, ஷட்கூட பைரவீ, அகோர பைரவீ, ஸம்பத்ப்ரதா பைரவீ என ஐந்து.

மேற்கில் ஸஞ்ஜீவநீ, ம்ருத்யுஞ்ஜயா, அம்ருதஸஞ்ஜீவனீ பைரவீ, வஜ்ரேச்வரீ, த்ரிபுர பைரவீ, பயஹாரிணீ, ஸம்பத்ப்ரதா பைரவீ என ஏழு. வடக்கில் டாமரேச்வரீ, பயத்வம்ஸிநீ பைரவீ, அகோர பைரவீ, ஸம்பத்ப்ரதா பைரவீ என நான்கு. மத்தியில் ப்ரதம ஸுந்தரீ, த்விதீய த்ரிதீய, சதுர்த்த, பஞ்சம ஸுந்தரீ என்று ஐந்து. ஆக 24 தேவதைகளின் மந்த்ரங்கள் சிம்ஹாஸன மந்திரங்கள் எனப்படும். இவர்களுக்கு ஈஸ்வரி என்று பொருள்.

இப்படியாக சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற மூன்று தொழிலையுமே லலிதாம்பிகை நிகழ்த்துவதால் முதல் மூன்று நாமங்கள் அதிமுக்கியத்துவம் பெறுகின்றன. இந்த மூன்று தொழிலையும் இவள் ஒரே நேரத்தில் நிகழ்த்துகின்றாள். சிருஷ்டி நடந்து கொண்டிருக்கும்போதே பரிபாலனமும், பரிபாலனம் நடக்கும்போது அழித்தலும் நடைபெறுவதை நாம் சூட்சுமமாக கவனிக்கும்போது அறிந்து கொள்ளலாம்.

இன்னும் வேறொரு கோணத்தில் இந்த சம்ஹாரத்தை பார்க்கலாம். உதாரணமாக, ஒரு குழந்தையை உருவாக்குவது சிருஷ்டி. அந்தக் குழந்தையை வளர்ப்பது பரிபாலனம். அந்தக் குழந்தையை தூங்க வைப்பது சம்ஹாரம். அதாவது இந்த உலகம் என்கிற பிரபஞ்சத்தை அப்பால் தள்ளி, மெல்லியதாய் அழித்து தன்னை மறக்கச் செய்யும் தூக்கத்தில் கொண்டுபோய் அமர வைத்தல். இவை யாவும் நம் தினசரிகளில் நிகழ்வதும் கூட. எனவே, தூக்கம் என்பதை ஞானிகள் நித்தியப் பிரளயம் என்றார்கள். இந்தப் பிரளயமும் சம்ஹாரமும் அழித்தலில்தான் வரும்.

இன்னும் பார்த்தால் க்ஷண பிரளயம்… அதாவது, இந்தக் கணம் உருவாகி அடுத்த கணம் அழிதல், நித்திய பிரளயம் என்பது தினமும் சூரியன் உதித்து அஸ்தமனம் ஆகும் இடைப்பட்ட இரவு நேரம். யுகப் பிரளயம் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்றுதல். இதற்கும் அப்பால் மகாபிரளயமும் உண்டு. இது நம்மால் யோசிக்க முடியாத விஷயமாகும். இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போய் யோசிப்போமா!

ஏனெனில், சில விஷயங்களை நாம் பார்க்கும் பிரபஞ்சத்தை வைத்துக் கொண்டு மட்டுமே விவரிப்போம். அதாவது மனதைக் கொண்டும், பஞ்ச இந்திரியங்களைக் கொண்டு மட்டுமே பார்ப்போம். கண், மூக்கு, செவி, தோல், வாய் என்று நம்முடைய அனுபவ மண்டலத்திற்கு உட்பட்டே பார்ப்போம். ஆனால், லலிதா சஹஸ்ரநாமம் இதையும் காட்டி இதைத் தாண்டி வேறொரு ஆழமான பரிமாணம் இதற்குண்டு என்றும் காட்டிச் செல்கின்றது. எனவே, அதைப் புரிந்து கொள்வதுதான் மனதைத் தாண்டிச் செல்ல உதவும். அந்தப் பிரமாண்ட சக்தியான லலிதையின் விஸ்தீரணம் அறியவும் உதவும்.

முதல் நாமமான சிருஷ்டியைபற்றி நாம் பார்க்கும்போது நம் மனம் எங்கு உற்பத்தியாகின்றதோ, எந்த இடத்தில் எல்லா பிரபஞ்சமும் தோன்றுகின்றதோ, இந்த மனதில் இந்த பிரபஞ்ச படம் மொத்தமும் உருவாகின்றதோ அந்த மூலத்திற்கு சென்று சேர்தலே சிருஷ்டியினுடைய உண்மையான அர்த்தம் என்று பார்த்தோம். அடுத்து, ஸ்திதி என்கிற காத்தல் என்பது அந்த நிலையிலேயே அதாவது அந்த ஆத்ம ஸ்தானம் அல்லது இருதய ஸ்தானத்திலேயே ஜீவனை விலகாது இருத்துதலையே ஸ்திதி என்றும் பார்த்தோம்.

இப்போது இந்த ஸ்ரீமத் சிம்மாசனேஸ்வரி என்பதற்கு ஒருவேளை ஆத்ம ஸ்தானத்தை விட்டு ஒரு ஜீவன் வெளியே மனம் என்ற ஒன்றை பற்றிக் கொண்டு, உடம்பு என்பதின் மேல் அபிமானம் கொண்டு விலகும்போது, அப்படி எந்த அகங்காரம் விலகச் செய்கிறதோ அந்த அகங்காரத்தை, அந்த நான் எனும் அகங்காரத்தை ஒரே வெட்டாக வெட்டி அழிக்கின்றாள். இப்படி வெளிப்புறமாக ஓடும் மனதை உள்முகமாக திருப்புவதோடு மட்டுமல்லாமல், வெளிப்புறத்தே ஓடச் செய்யும் சக்தியையும் வெட்டி வீழ்த்துகிறாள்.

இப்படி புறத்தே ஒரு அழித்தல் இருந்தாலும், அகத்தே நிகழ்த்தும் அழித்தலையும் இவளே செய்கின்றாள். இன்னொரு பிறவியை எடுப்பதற்குண்டான வாசனையை அறுத்து பிறவியே வேண்டாத நிலைக்கு நம்மை இவள் தள்ளுகிறாள். இன்னும் விளக்கமாகப் பார்த்தால் எந்த ஒரு மனம், மனதிற்கு ஆதாரமான எண்ணங்கள், எண்ணங்களுக்கு ஆதாரமான பல நூறு ஆண்டுகளான வாசனைகள் எல்லாம் தொடர்ந்து வெளியுலக பிரபஞ்சத்தை நோக்கி ஓடுகின்றனவோ அதையெல்லாம் தடுத்து உள்முகமாக திருப்புதலையே இங்குசம்ஹாரம் என்று சொல்கின்றோம்.

இந்த அழித்தலை அவள் கருணையின் பொருட்டு மட்டுமே செய்கின்றாள். அத்யாத்ம தத்துவம் என்று சொல்லப்படும் உள்முக ஆத்ம தத்துவத்தின் படி பார்த்தால் ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரிக்கு இதுதான் திரண்ட பொருள். இது முற்றிலும் அகமுகமாக திருப்பும் அகப் பிரபஞ்சத்திற்குரிய விளக்கமாகும். மற்றபடிக்கு புறப் பிரபஞ்சத்திற்கு அழித்தலே விளக்கமாக அமையும்.

அது பிரளயகாலம். பராசக்தியின் பேரன்பு புரண்டு மடிந்து ஆழிப்பேரலையாய் வானம் முட்டி எழுந்தது. ஆதிமாயையான மஹாமாயை, ஞானரூபிணியாக அண்டசராசரத்தையும் தன் மூலத்தோடு ஒடுக்கி ஒன்றிணைக்கும் சமயத்தில், அனைத்தையும் நீரால் கரைத்து நீரையும் தனக்குள் கரைத்து தானே சகலமுமாய் மாறி நிற்பாள்.

சகல ஜீவர்களின் சம்சார சகடச் சுழற்சியையும் கணநேரத்தில் மூலத்தின் லயிப்பில் சாந்த சமுத்திரமாய் விளங்கவைக்கும் ஊழிக்காலம் அது. ஈசனும், விஷ்ணுவும் யோகநித்திரையில் ஆழ மகாசக்தி பிரபஞ்ச நாடகத்தை நிறுத்தி யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பேரற்புதமான நிகழ்வு அது. இந்த நிகழ்வை நிகழ்த்துபவளுக்கே ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி என்று பெயர்.

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

எதிரிகளை துவம்சம் செய்யும் திருநாமம் தேவையற்று நம் வாழ்வில் சிக்கல் ஏற்படும்போதெல்லாம் உச்சரிக்க வேண்டிய நாமம் இதுவேயாகும். இன்னும் சொல்லப்போனால் நாம் சும்மா இருந்தாலும் நம்மை சீண்டிக் கொண்டேயிருக்கும் எதிரிகளின் தொல்லையை நீக்கும் நாமம் இதுவேயாகும். எனவே, தங்களைச் சுற்றிலும் தேவையற்ற நபர்களால் பிரச்னைகள் உருவாகி வந்த வண்ணம் இருக்கின்றது என்றால் இந்த நாமத்தை துர்க்கையின் முன்பு அமர்ந்து சொல்லுங்கள். உடனே பிரச்னை தீரும் பாருங்கள்.

நாமம் சொல்லும் கோயில்

இந்த நாமம் அழித்தலை குறிக்கின்றது. நம்மிடம் உள்ள அறியாமை, சோம்பல், மனம் விழிக்காது தூக்கத்திலேயே கிடத்தலை நாம் அழித்தேயாக வேண்டும். அப்படி தேவியானவள் எருமை வடிவெடுத்து வந்த மகிஷனை அழித்த தலமாக அம்மன்குடி என்கிற தலம் விளங்குகின்றது. இங்குள்ள கைலாசநாதர் ஆலயத்திலுள்ள துர்க்கைக்கு அஷ்டபுஜ துர்க்கை என்று பெயர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள்.

மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.  பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது.

தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும். அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு.
பிரம்மராயர் காலத்திய துர்க்கையின் சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பழைய சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகைப் பார்க்க நம் அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும். இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள் இந்த அஷ்டபுஜ துர்க்கை.

வாழ்வின் வெம்மை தாங்காது பயம் என்று கைகூப்பி நின்றோருக்கு அபயமளித்து அருட் கடலில் ஆழ்த்துவாள் இந்த அம்மன்குடி நாயகி. இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் & உப்பிலியப்பன் கோயில் & அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.

(சக்தி சுழலும்)

The post எதிரிகளின் தொல்லை போக்குவாள் ஸ்ரீமத் சிம்ஹாஸனேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Srimad Simhasaneswari ,Adi Shakti ,Lalita Sahasranamams ,Ramya Vasudevan ,Krishna ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி