×

கல்வியில் தனிக்கவனம் செலுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கல்வியில் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று சென்னை பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கல்வி ஊக்கத் தொகையினை வழங்கினார். இதை தொடர்ந்து, சென்னை பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களைப் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும், இளைஞர் பாராளுமன்றக் குழு சபையினை பள்ளிகளுக்கு இடையே சிறப்பாக நிகழ்த்திய சபாநாயகர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் என்னை அங்கு சென்று நீ பேச வேண்டாம். மாணவர்களை பாராட்டி வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். இங்கு, பரிசுத் தொகை பெறும் அனைவரும் இதனை பரிசுத் தொகை என்று கருதாமல், இது உங்களின் உரிமைத் தொகை என்று கருத வேண்டும். எங்கள் அனைவருக்கும் பிராண்ட் அம்பாசிடர் தமிழ்நாடு முதல்வர் என்பதைப் போல, மாநிலத்தில் பிராண்ட் அம்பாசிடர்களாக நீங்கள் அனைவரும் மாற வேண்டும். வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமலும், தவறான பழக்கங்களுக்கு இடம்கொடுக்காமலும், படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு படிக்க வேண்டும். மேலும், கல்வியில் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி படித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கல்வியில் தனிக்கவனம் செலுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Tamilnadu ,
× RELATED பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக...