×

உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவின்றி தவிக்கும் வயதான தம்பதி

*குழந்தைகள், உறவுகள் இல்லை

* உணவுக்கும் வழியில்லை

மதுரை : மதுரையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஆதரவின்றி தவிக்கும் வயதான தம்பதியை மீட்டு, காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அவனியாபுரம் அருகேயுள்ள வைக்கம் பெரியார் நகர் மாரியம்மன் கோவில் முதல்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(72). இவரது மனைவி கணபதியம்மாள்(68). இவர்களுக்கு குழந்தைகளங இல்லை. ஆரம்ப காலத்தில் அவர் வாட்ச்மேன் வேலையும், கணபதியம்மாள் சமையல் வேலையும் பார்த்து வந்துள்ளனர். தற்போது, இந்த தம்பதிக்கு வயதான காரணத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இருவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு, உணவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வருகின்றனர்.

ரூ.1000 வாடகையில் வீடு எடுத்து தங்கியுள்ள இவர்கள், கடந்த சில நாட்களாக வாடகை கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டை காலி செய்யும்படி கூறி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இவர்கள் பல இடங்களில் உதவி கேட்டும் கிடைக்கவில்லை என வேதனையில் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து தமிழரசன் கூறும்போது, ‘‘எங்களுக்கு குழந்தைகள், உறவினர்கள் என யாரும் இல்லை. இந்த வயதான காலத்தில் போதுமான உணவு கிடைக்காமல் தவித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக நாங்கள் உதவி கேட்டும் யாரும் செய்ய முன் வரவில்லை. தற்போது, மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. எனக்கு மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால, கண் பார்வை குறைவாக உள்ளது.

ஜன.1ம் தேதி வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் நாங்கள் எங்கு செல்வது என தெரியாமல் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறோம். நாங்கள் இருவரும் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் எங்கு சேர்த்து விட்டாலும் கடைசி காலம் வரை எங்கள் வாழ்க்கையை அங்கேயே முடித்துக்கொள்வோம். ,இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம். உடல் நிலை பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில், எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்று தினந்தோறும் கவலையில் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறோம்’’ என்றார்.

மனநலம் பாதித்த இளம்பெண்…

உசிலம்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆதரவின்றி சுற்றி வருகிறார். பொதுமக்கள் விசாரித்தபோது தனது பெயர் விஜய் என்கிறார். ஆனால் சொந்த ஊரை கூறவில்லை. அவர் தமிழ் மொழியை ஆங்கிலத்துடன் கலந்து பேசுகிறார். பொதுமக்கள் அவரை ஆசிரமத்தில் சேர்ப்பதாக கூறியபோது, அதனை ஏற்க மறுத்து விடுகிறார். இளம்பெண் என்பதால் அவரது பாதுகாப்பு கருதி போலீசார் அவரை ஏதேனும் மனநல காப்பத்தில் சேர்க்க வேண்டும். அல்லது அவரது குடும்பத்தினரை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவின்றி தவிக்கும் வயதான தம்பதி appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED ஓய்வு பெறும் நாளில் மதுரை...