×

எடப்பாடி உறவினர்கள்ரூ.5 கோடி நிலம் மோசடி: கோவை ஐஜி ஆபீசில் புகார்

கோவை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்கள் ரூ.5 கோடி நிலம் மோசடி செய்ததாக கோவை ஐஜி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்டோர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள்ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஐஜி பவானீஸ்வரியிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த 2012ம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி பிராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த், மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டுமனை விற்பதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 86க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தோம். நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்றோம். அப்போது, அது அனுமதியற்ற மனை பிரிவுகள் என்பது தெரியவந்தது.

2017ம் ஆண்டு அனுமதியற்ற மனை பிரிவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து மனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அப்போது இந்த நிலங்களுக்கு எந்தவிதமான அரசு சார்ந்த நடவடிக்கையும் எடுக்காமல் மோகனசுந்தரம், மணிக்கவுண்டர் மருமகன் சந்திரகாந்த், சபாநாயகம், சங்கர், பத்மபிரியா, சிவா ஆகிய 5 பேர் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான வரைபடம் தயாரித்து எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது.

சந்திரகாந்தின் சகோதரர் சூரியகாந்தின் மனைவியும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனின் மனைவியும் சகோதரிகள் ஆவர். மணிகவுண்டரின் மருமகன் சந்திரகாந்த் என்பதால், மணிகவுண்டர் கடந்த ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்தார். எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post எடப்பாடி உறவினர்கள்ரூ.5 கோடி நிலம் மோசடி: கோவை ஐஜி ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Coimbatore IG ,Coimbatore ,Chief Minister ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...