×

ஒரு போட்டோ போதும்…வாழையின் நோய் மற்றும் நோய்க்கான தீர்வு

‘டுமாய்னி செயலி’ வாழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

‘இளச்சவன் எள்ளையும், வலுத்தவன் வாழையையும் சாகுபடி செய்ய வேண்டும்’ என்பது கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழி. காரணம் வாழைச் சாகுபடி செய்ய தரிசுக்கூலி அதிகம் பிடிக்கும். அதோடு பூச்சிநோய் தாக்கம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தோப்பும் பாதிப்புக்குள்ளாகும். வாழை நன்றாக குலைதள்ளி நல்ல மகசூல் எடுத்து விடலாம் என விவசாயி கனவு கண்டுகொண்டிருக்கும் போது ஒரு சிறு மழை, சற்று தடித்த காற்று வீசினால் கூட ஒட்டுமொத்த தோப்பும் உருக்குலைந்து போகும். இதனால்தான் வலுத்தவன் வாழை சாகுபடி செய்ய வேண்டும் என்கின்றனர். எள் சாகுபடியில் இந்த பிரச்சினை எதுவும் இல்லை. உழவு ஓட்டி எள்ளை விதைத்துவிட்டு வந்தால் போதும். அறுக்கும் பருவத்தில் சென்று அறுத்து மகசூல் ஈட்டிவிடலாம்.உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வாழை சாகுபடி சற்று ‘ரிஸ்க்’ நிறைந்தது. ரிஸ்க் எடுக்காவிட்டால் ரஸ்க் சாப்பிட முடியாது என நினைக்கும் துணிச்சல் விவசாயிகள் மட்டுமே வாழை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர் ஒரு காலத்தில். தற்போது அவ்வாறு இல்லை. வாழை விவசாயிகளை வாழ வைக்கும் விவசாயமாக மாற்றம் கண்டுள்ளது. உலகம் முழுவதும் 13 கோடி டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியா வாழைச் சாகுபடி பரப்பிலும், உற்பத்தித் திறனிலும் உலகில் நெ.1 இடத்தில் உள்ளது. அதற்குக் காரணம் வாழைச் சாகுபடியில் ஏற்பட்ட அதிநவீனத் தொழில் நுட்பங்கள். தற்போது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியுடன் இயங்கும் ‘டுமாய்னி’ என்ற இலவச செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி வாழையில் நோய் பாதித்த பகுதியை ஒரு போட்டோ எடுத்தால் போதும், என்ன நோய், பாதிப்பு எவ்வளவு, என்ன தீர்வு என ஆய்வு செய்து உடன் பரிந்துரைகளை செயலி வழங்கிவிடும். இந்த செயலியால் பாதிப்புக்கு உடன் தீர்வு பெறலாம். இந்த செயலியை கொலம்பியாவின் சர்வதேச வெப்ப மண்டல மையம், அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக மண் மற்றும் அறிவியல் துறை, உகாண்டா, எத்தியோப்பியாவை சேர்ந்த சர்வதேசப் பல்லுயிர் மற்றும் சர்வதேச வெப்ப மண்டல விவசாய மையங்கள் மற்றும் இந்தியாவின் திருச்சி மாவட்டம் துறையூர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் உயிரி தொழில் நுட்பவியல் துறை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த விஞ்ஞானிகளில் ஒருவர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் உதவிப் பேராசிரியர் இளையபாலன். இவர் இந்த செயலி குறித்து கூறுவதை கேட்போம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஈச்சம்பட்டி என் சொந்த ஊர். பாரம்பரிய விவசாயக் குடும்பம். இப்போதும் அங்கு 13 ஏக்கரில் நெல், வாழை, சோளம் மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறேன். பாரம்பரிய விவசாயக் குடும்பம் என்பதாலோ, என்னவோ 2004ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரியில் பிஎஸ்சி (வேளாண்மை) சேர்ந்தேன். இளநிலை பட்டப்படிப்பு முடித்து அங்கேயே எம்எஸ்சியும் முடித்தேன். முனைவர் பட்டம் பெறும் நோக்கத்துடன் நாட்டு ரக வாழைகளில் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க வாழை ரகங்களை உருவாக்க பூவன், நெய்பூவன், விருப்பாட்சி, சிறுமலை ஆகிய நாட்டு ரக வாழைகளில் ஆய்வு மேற்கொண்டேன். ஆய்வுக்கள் முடிந்து ஆய்வுகட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றதுடன், என் ஆய்வுக் கட்டுரை தேசிய விருதும் பெற்றது.

2010ல் பிஹெச்டி முடித்தவுடன் ஆப்பிரிக்காவின் தான்சானியா மாகாணத்தில் திசு வாழை தொழில் நுட்பம் மற்றும் வாழைச் சாகுபடி குறித்த விரிவான ஆய்வு வகுப்பில் பணியாற்றினேன். 2019ம் ஆண்டு சீனா உலகம் முழுவதும் இருந்தும் 35 வல்லுநர்களைத் தேர்வுசெய்து துல்லிய பண்ணயம் குறித்து நடத்திய பயிற்சியில் கலந்துகொண்டேன். அதில் பல முன்னோடி வேளாண் முறைகளை கற்க முடிந்தது. மலேசியா, சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்த வாழை தொடர்பான மாநாடுகளில் இரண்டு முறை கலந்துகொண்டு உரையாற்றியுள்ளேன். இதன் விளைவாக உலக நாடுகளின் பல வேளாண் விஞ்ஞானிகளின் அறிமுகங்கள் கிடைத்தன. இந்நிலையில்தான் சர்வதேசப் பல்லுயிர் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி கைஃப்ளோமி, சர்வதேச வெப்ப மண்டல விவசாய மையத்தின் விஞ்ஞானி மைக்கேல் கோமஸ் செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து இந்த ‘டுமாய்னி’ செயலியை உருவாக்கினோம். வாழை உலகளவில் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் திடீர் நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பயிராகும். நோய் மேலாண்மை வாழையில் சற்று சிக்கலாக இருப்பதை உணர்ந்து அதை எளிமைப் படுத்தும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலியை இலவசமாக ‘பிளே ஸ்டோர்’ வாயிலாக விவசாயிகள் தங்கள் ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’களில் தரவிறக்கம் செய்யலாம். பின்னர் செல்போனின் செயலியை திறந்து வாழையின் முழுமரத்தையோ அல்லது நோய் தாக்கிய பகுதியையோ ஒரு போட்டோ எடுத்து, ஸ்கேன் என்ற பொறியைத் தட்டினால் போதும்.

வாழையைத் தாக்கியிருக்கும் நோய் என்ன, எவ்வளவு சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விளக்கங்களுடன் ஒன்றுக்கு இரண்டாகத் தீர்வுகளை பரிந்துரைகளாக வழங்கும். வாழையின் தண்டு, இலை, பூ, காய், கனி என தனித்தனியாக படம் எடுத்தும் அவற்றில் தாக்கியிருக்கும் நோய்கள் குறித்து அறிந்து தகுந்த பரிந்துரைகளைப் பெற்று வாழையை நோய் பாதிப்பில் இருந்து காக்கலாம். பூச்சி, நோய் தாக்கத்துக்குள்ளான 4 லட்சம் வாழையின் புகைப்படங்கள் இந்த ‘டுமாய்னி’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘கம்ப்யூட்டர் விஷன்’ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த செயலி இயங்குகிறது. வாழையில் வாடல்நோய், இலைப்புள்ளி நோய், வேர் அழுகல் நோய், கூன்வண்டு தாக்கம் என பல நோய்கள் ஏற்படும். இந்த நோய் தாக்கங்களில் இருந்து வாழையை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் அதிகளவில் ரசாயன மருந்துகள், உரங்கள் என பெருந்தொகையைச் செலவுசெய்வதால், அவர்களின் லாப சதவீதம் குறைகிறது.

இந்த செயலி வாயிலாக வான் வழி கண்காணிப்பு என்ற அணுகுமுறையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த வாழையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை தனித்தனியாக தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு தெரிந்து கொள்வதால் தேவையின்றி நோய்த்தாக்குதல் ஏற்பட்டுவிட்டது என்ற உடன் அதிகம் செலவு செய்து மொத்த வாழைத் தோப்புக்கும் மருந்து தெளிக்க வேண்டியதில்லை. நோய் பாதித்த மரத்துக்கு மட்டும் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வாழையை காக்கலாம், நோய் பரவாமலும் தடுக்கலாம், நோய் வருவதற்கு முன்னரும் வரும்முன் காக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம். வாழைச் சாகுபடியில் ஏற்படும் மிகையான செலவை குறைத்து வருவாயை இரட்டிப்பாக்கலாம். மேலும் ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் குறைந்த செலவில் நோய்களுக்கான தீர்வைப் பெற்று உயர் மகசூல் ஈட்டலாம். இச்செயலி வாழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது
என்றார் உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு:
இளையபாலன்: 63818 43648

The post ஒரு போட்டோ போதும்… வாழையின் நோய் மற்றும் நோய்க்கான தீர்வு appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெலங்கானாவில் மேலும் ஒரு பிஆர்எஸ் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்