×

போதை பொருட்கள் ஒழிப்பில் துணிச்சலான நடவடிக்கை

*சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐ, ஏட்டு முதல்வர் விருதுக்கு தேர்வு

நாமக்கல் : தமிழக சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின் போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிக்க கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 2023ம் ஆண்டு, சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்வரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாமக்கல் மதுவிலக்கு பிரிவு எஸ்ஐ முருகன், எருமப்பட்டி ஏட்டு குமார் ஆகியோருக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக, மாநில அளவிலான விருது பட்டியலில், நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் எஸ்.ஐ மற்றும் ஏட்டு என இருவர் இடம்பெற்றுள்ளது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க 2 ஆண்டாக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு எஸ்பியாக பணியாற்றிய சரோஜ்குமார் தாகூர், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்தார். இதற்காக சிறப்பு தனிப்படைகளை அமைத்தார். இந்த தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குட்கா வியாபாரிகளை கைது செய்தனர்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த வியாபாரிகளை கூண்டோடு கைது செய்தார். அவருக்கு பின்பு எஸ்பியாக பொறுப்பேற்ற சாய்சரண் தேஜஸ்வி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் போதை பொருட்களின் தீங்கு குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். \\”எனக்கு வேண்டாம் போதை பொருள்\\” என்ற வாசகத்தை மாணவ, மாணவியரின் மனதில் பதிய வைத்தார். மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளி- கல்லூரிகளில் அந்தந்த காவல்நிலைய அதிகாரிகள் மூலம், போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்மூலம் மாணவ- மாணவியர் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, நாமக்கல் மாவட்ட எஸ்பியால் நியமிக்கப்பட்டு தனிப்படையில் பணியாற்றிய எஸ்ஐ முருகன், ஏட்டு குமார் ஆகியோர், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை துணிச்சலுடன் மேற்கொண்டனர். இவர்கள் நாமக்கல் அருகே பொன்நகர் பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது, 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், சின்னவேப்பநத்தம் பகுதியில் 1.5 டன் குட்காவை கைப்பற்றினர். அப்போது, கைது செய்யப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது, இவர்கள் இருவரும், முதல்வரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் எஸ்பி ராஜேஷ்கண்ணனும், போதை பொருட்கள் ஒழிப்பில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் போலீசார் தொடர் சோதனை செய்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகிறார்கள்.

The post போதை பொருட்கள் ஒழிப்பில் துணிச்சலான நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : SI ,Tamil Nadu Legislative Assembly ,Aathirvait Department ,Dinakaran ,
× RELATED சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்..!!