சென்னை : நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது. நவீன விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் இப்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச பயன்படுகின்றன. பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக பேச தைரியம் இல்லாத தலைவர்கள் ட்ரோன்களை ஏவுகின்றனர்.
இது போராடும் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். ட்ரோன்களில் கேமிராக்களை பொருத்தி போராடுபவர்களை அடையாளம் கண்டு பழிவாங்குவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல.அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ட்ரோன்கள் அதை அடக்கக்கூடாது இந்த அடிப்படை உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். இது விவசாயிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நம் அனைவரையும் பற்றியது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post “நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன..” : அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.