×

டிரைவிங் லைசென்ஸ் கேட்டு அதிக விண்ணப்பம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கலாம்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு

நெல்லை: சென்னை பெருநகரம் மட்டுமின்றி, பெரும்பாலான மாவட்டங்களில் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேங்கிக் கிடப்பதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் சென்றன. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர்களின் எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களில் குறைவாக உள்ளன. எனவே அலுவலகங்களில் அதற்கேற்பவே லைசென்ஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் விண்ணப்பங்கள் தேங்காத வகையில் வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ்கள் வழங்கிட சனிக்கிழமைகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தேவைப்பட்டால் இயங்கலாம் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் தங்களுக்கு லைசென்ஸ் பெறவும், டெஸ்டிங் செல்லவும் சனிக்கிழமை வசதியாக இருக்கும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை கமிஷனர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிக லைசென்ஸ்கள் கேட்டு விண்ணப்பங்கள் வரப்பெற்றால், டெஸ்டிங் பணிகள் நடத்திடும் வகையில் சனிக்கிழமைகளிலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றலாம்.

ஆனால் அதற்காக மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து, அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகை செய்தி முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும். ஏனெனில் அந்த சனிக்கிழமைகளில் டிரைவிங் லைசென்ஸ் கேட்டு காத்திருப்போர் பயன் அடையும் வகையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணிகள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு சாதகமாக எவ்விதத்திலும் சனிக்கிழமை வேலைநாளை பயன்படுத்த கூடாது. மண்டல போக்குவரத்து அலுவலர்கள் இதை உன்னிப்பாக கண்காணித்திட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டிரைவிங் லைசென்ஸ் கேட்டு அதிக விண்ணப்பம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கலாம்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chennai ,
× RELATED நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!