×

திராவிட இயக்க கொள்கை ஜீவநதி உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் கி.வீரமணி..!!

சென்னை: திராவிட இயக்க கொள்கை ஜீவநதி உதயநிதிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் கூறியதாவது, இன்று (27.11.2023) தி.மு.க.வின் ஆற்றல்மிகு, இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் பெரியாரின் கொள்கைத் திறன் நிரம்பிய செயல் வீரச் செம்மலுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய, வாழ்த்துதலுக்குரிய கொள்கைக் காவல் நாள் ஆகும்.

காரணம் அவர் லட்சோப லட்சம் தி.மு.க. இளைஞர்களின் கொள்கைப் பாசறையாய் களம் அமைத்து வெற்றி உலா நடத்தி, அதன் முத்தாய்ப்பாய் வருகிற டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் மாநில இளைஞரணி மாநாடு நடத்தி திராவிடர் கொள்கைப் பயிர் செழித்தோங்க உரமிட்டு வளர்க்க ஊரெல்லாம் பாயும் ஏவுகணைகளாகத் தி.மு.க. இளைஞர்களை பக்குவப்படுத்தியவர். திராவிடர் இயக்கத்தின் தனிச் சிறப்பே, தந்தை பெரியார் காலத்திலிருந்து, கொள்கைக் குடும்ப உறவுகளாக்கி, பாசத்தை மறக்காது, தந்தை, அண்ணன், உடன்பிறப்பு என்ற வயது இடைவெளியோ, ஜாதி, மத, பால் அடையாளங்களோ, வேறுபாடுகளோ இல்லாமல் பழகிடும் நல்ல கொள்கைக் குடும்பமாக உருவாக்கமே!.

அதனை சிறப்பாக, கொள்கை எதிரிகளின் குலை நடுங்க செயல் வடிவமாய்ப் பேருரு கொள்கிறார்! “கொண்ட லட்சியத்திற்காக எந்த விலையும் கொடுப்பேனே தவிர, பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்ற அவரது உறுதிக்கு முன் வைரக் கிரீடமானது வெகு சாதாரணம்! ஒரு உண்மை சுயமரியாதைப் போராளியின் திராவிட தத்துவமும், இலக்கணமும், அடையாளமும் அதுதான்! எனவே தோழர் உதயநிதி திராவிட இயக்கம் என்ற கொள்கை ஜீவநதியாவார். இவரைத் தக்க நேரத்தில் அடையாளம் கண்டு களத்தில் நிற்க வைத்த தி.மு.க.தலைவரின் முன்னோக்கு எடைபோடும் ஆற்றலையும் கண்டு பெருமிதம் கொள்கிறேன். சோதனை மிகுந்த, நாணயமற்ற, சூழ்ச்சி, சூதுமதியான ஆரியத்தை எதிர்த்து நிற்கும் களத்தில் அவரது இளைஞர் பட்டாளம் நிச்சயம் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்! வயது ஏறுவது அவருக்கு மூப்பு அல்ல முதிர்ச்சியே வாழ்க! வளர்க! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post திராவிட இயக்க கொள்கை ஜீவநதி உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் கி.வீரமணி..!! appeared first on Dinakaran.

Tags : K. Veeramani ,Jeevanadi Udayanidhi ,CHENNAI ,President ,Dravidar ,Kazhagam K. Veeramani ,Jeevanathi Udayanidhi ,
× RELATED கள்ளக்குறிச்சி பகுதியில்...