×

சுற்றி திரியும் நாய்களால் பயணிகள் அலறி ஓட்டம்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு மற்றும் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. அவை ஒருசில பயணிகளை துரத்தி வருவதால், நாய்க்கடிக்கு பயந்து அனைத்து பயணிகளும் அலறியடித்தபடி ஓடிவருகின்றனர். இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு விமானநிலைய இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களின் வருகை, புறப்பாடு மற்றும் உள்பகுதி, கார் பார்க்கிங் மற்றும் வாகன பபாதை உள்பட பல்வேறு வெளிப்பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்கு சூட்கேஸ்களுடன் திரும்பி வரும் விமானப் பயணிகளை துரத்தியபடி கடிக்க வருகின்றன. இதனால் அங்கு வரும் அனைத்து பயணிகளும் அலறியடித்து ஓடிவரும் அவலநிலை நீடித்து வருகிறது.

விமானநிலைய வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் படுத்து ஓய்வெடுப்பதும், சுற்றி திரிவதுமாக உள்ளன. இவற்றில் ஒருசில நோய் தாக்குதலுக்கு உள்ளான வெறிநாய்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டபடி கும்பலாக ஓடி வருகின்றன. இதை பார்த்து மிரளும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சூட்கேஸ்களுடன் ஓடும்போது, அந்த நாய் கும்பல் பயணிகளையும் துரத்தியபடி ஓடிவருகிறது. இதில் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர்.

மேலும், ஒருசிலரை இதுபோன்ற தெருநாய்கள் கடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த தெருநாய்களின் விரட்டுதலில் பயணிகள் மட்டுமின்றி விமானநிலைய அதிகாரிகள், சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர்கள், போலீசார் மற்றும் ஊழியர்களும் அடக்கம். இதனால் அங்கு வெளிநாட்டு பயணிகளிடையே சென்னை விமானநிலைய பாதுகாப்பு குறித்து கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனினும், இந்த நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை விமானநிலைய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர் என பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில்,
இங்கு சுற்றி திரியும் ஒருசில நாய்களை புளூகிராஸ் அமைப்பினர் பிடித்து செல்கின்றனர். அவற்றுக்கு கருத்தடை செய்து, மீண்டும் இங்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இங்குள்ள நாய்களை முழுமையாக அகற்றி, நிரந்தர தீர்வு காண்பதற்காக மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி புளூகிராஸ் தென்மண்டல இயக்குநா் டான் வில்லியம்ஸ் கூறுகையில், சென்னை விமானநிலைய வளாகத்தில் சுற்றி திரியும் நாய்களை நாங்கள் அடிக்கடி பிடித்து சென்று கருத்தடை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுவிடுவோம். இதில், விமானநிலையத்துக்கு வெளியே சுற்றி திரியும் நாய்கள்தான் அதிகம். அதற்கு சாலையோர உணவகங்கள்தான் காரணம். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். எனவே, சென்னை விமானநிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரியும் தெருநாய்களை முற்றிலும் அகற்றி, இப்பிரச்னைக்கு சென்னை விமானநிலைய இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

The post சுற்றி திரியும் நாய்களால் பயணிகள் அலறி ஓட்டம்: நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்