×

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது; அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

சென்னை: மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து-அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் மரணம், சென்னை குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் கவர்னர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்நிலையில் மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். போராட்டத்தை திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இந்த போராட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், த.வேலு, இளைய அருணா, எம்பிக்கள் எம்.சண்முகம், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன், திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன், மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி, எம்எல்ஏக்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட சென்னை மாவட்ட அனைத்து எம்எல்ஏக்கள், பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன் மோகன், சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எம்.விநாயகமூர்த்தி, சங்கர் கணேஷ், ஆர்.கிருஷ்ணகுமார், ஜெ.இ.பாண்டியன், கா.வீ.தியாகராஜன், ராமாபுரம் செ.ரவி, கோட்டூர் எஸ்.பிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகி வீணா  வி.ஆர்.ரவி கலந்து கொண்டனர்.

மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு இளைஞர் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் மாநில பொது செயலாளர் பெ.தங்கப்பாண்டியன், துணை தலைவர் ஈ.சி.ஆர்.அன்சாரி, தகவல் தொழில்நுட்ப அணி செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில், மருத்துவர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர்கள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் வள்ளூவர் கோட்டமே திக்குமுக்காடிய காட்சியை காண முடிந்தது. அந்த அளவுக்கு மக்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தை தி.க. தலைவர் கி.வீரமணி முடித்து வைத்தார். முன்னதாக நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த 24 மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.ேக.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், இணை-துணை தலைவர்கள், இணை-துணை செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

*அனிதாவின் படத்தை பார்த்து கண்கலங்கினார்
உண்ணாவிரத போராட்டத்தில் நீட் தேர்வால் உயிர் இழந்த அரியலூர் மாணவி அனிதா குறித்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் அனிதா பேசும் காட்சியை பார்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தும் அவரால், முடியவில்லை. கண்களில் தேங்கிய கண்ணீரை பலமுறை அவர் துடைத்தார். இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

The post நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது; அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,NEET ,Chennai ,Udayanidhi Stalin ,Minister ,Duraimurugan ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...