×
Saravana Stores

திமுகவுக்கு சமூக நீதி என்பது உயர்மூச்சான கொள்கை: விக்கிரவாண்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திமுகவுக்கு சமூக நீதி என்பது உயர்மூச்சான கொள்கை. இந்தியா கூட்டணி அமைக்கும் அரசு சமூக நீதி அரசாக இருக்கும்; வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்

இன்று (05-04-2024) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் அவர்களையும், கடலூர் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அவர்களையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்

மக்கள் கடல் சூழ்ந்த மாபெரும் மாநாடுபோல் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் – ஆளுநருக்கு மாநில உரிமைகள் பற்றிப், பாடம் எடுக்கும் பேராசிரியர் முனைவர் பொன்முடி அவர்களுக்கும், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மஸ்தான், கணேசன் உள்ளிட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் – நிர்வாகிகளுக்கும் – என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

நமது பாசத்திற்குரிய சகோதரர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் முனைவர் ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எழுத்தாளர் – பத்திரிகையாளர் – அரசியல் விமர்சகர் – கவிஞர் – களப்போராளி – மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக மிகச்சிறப்பாக செயல்படுபவர். அவருக்கு, நீங்கள் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சகோதரர் விஷ்ணுபிரசாத் அவர்கள் போட்டியிடுகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக – நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறப்பாக பணியாற்றி, தன்னுடைய வாதங்களை அனைத்துத் தளங்களிலும் வலுவாக எடுத்து வைக்கக் கூடியவர். கடலூர் தொகுதி மக்கள் இவருக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க – தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக – உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன – வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காருங்கள்!

நான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் சொல்கிறேன். இந்தத் தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்! ஏன் என்றால், இன்றைக்கு நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது! பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின – சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்றால், எப்படிப்பட்ட ஆபத்து? உதாரணத்திற்கு இரண்டு மட்டும் சொல்கிறேன்.

நாட்டை நிர்வகிக்கும், ஒன்றிய அரசு செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை! அதேபோல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர் – உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் – இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும் – பட்டியலின – பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை! இதைப் பற்றி, எதிரில் கூடியிருக்கும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும்! உங்களில் பலரும் இப்போது படித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அப்பா–அம்மா, அவர்களின் அப்பா-அம்மாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! எதிர்காலத்தில், உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குச் செல்ல வேண்டாமா? கடந்த இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். நல்ல மரியாதையான வேலைகளுக்கு வந்திருக்கிறோம்.

இதற்கு என்ன காரணம்? நாங்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடும்; சமூகநீதியும்தான்! இன்னும் நமக்கான பிரதிநிதித்துவம் சரியாக – முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம்? பா.ஜ.க.! இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஏன்? ஒவ்வொருமுறையும் “இடஒதுக்கீடு எங்கள் உரிமை” என்று போராட வேண்டியிருக்கிறது, ஏன்? ஏன் என்றால், ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி, பா.ஜ.க! பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது! சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள்! நம்முடைய மக்களை, நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்! இதற்காகத்தான் நாம் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம்!

இடஒதுக்கீடு கிடைக்க நாங்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து போராடுகிறோம்… தி.மு.க. ஆட்சி என்பதே, சாமானிய மக்களுக்கான ஆட்சிதான்! பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வழியில், திராவிட மாடல் என்ற பெயரில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நானும் சாமானியர்களுக்கான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய வாழ்க்கையையே சமூகநீதிக்காக அர்ப்பணித்தவர்! அவர் முதல், இரண்டு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோதுதான், முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – ஆதிதிராவிடர் நலத்துறை என்ற புதிய துறையையே ஒடுக்கப்பட்ட மக்கள் பயனடையத் தனித் தனியாக உருவாக்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினார்.

ஆதிதிராவிட சமூகத்திற்கான 16 விழுக்காடு இடஒதுக்கீட்டை 18 விழுக்காடாக வழங்கினார். மூன்றாவது முறை முதலமைச்சராக இருக்கும்போதுதான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடும் – பழங்குடியின மக்களுக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கி, இப்போது தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கக் காரணமாக இருப்பவர் நம்முடைய தலைவர் கலைஞர். இங்கு மட்டுமல்ல, மண்டல் கமிசன் மூலம், ஒன்றியத்தில் இடஒதுக்கீடு வழங்கவும் காரணமானார். இப்படி, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஒளியேற்றி – ஒட்டுமொத்த நாட்டிற்கே சமூகநீதிப் பாதையை காட்டியவர்தான் நம் தலைவர் கலைஞர் அவர்கள்!

அந்தப் பாதையில் நாடு தொடர்ந்து, நடைபோட வேண்டும் என்றுதான், திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுப்பில், அகில இந்திய அளவில் சமூகநீதி மேல் உண்மையான அக்கறை உள்ள இயக்கங்களை – அரசியல் கட்சிகளை இணைத்து – அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கினோம். அந்தக் கூட்டமைப்பு மூலமாக கூட்டங்களை நடத்தி, சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் உரக்கப் பேசினோம்… மற்ற இயக்கங்களையும் பேச வைத்தோம்.

இப்போது நம்முடைய முழக்கம் – தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது… நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்…

”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக – பொருளாதார – சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று” அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை – நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பா.ஜ.க.விடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை! நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை! இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை! பா.ஜ.க. இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?

அதனால்தான், நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் – இது மிக மிக முக்கியமான தேர்தல் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். இது, இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல்! சர்வாதிகாரத்தை விரட்டியடிக்கும் தேர்தல்! சமத்துவம் – சகோதரத்துவம் – மத நல்லிணக்கம் – நம்முடைய உயிர்மூச்சான சமூகநீதிக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல்! சமூகநீதியை நிலைநாட்டப் போராடும் நமக்கும் – சமூக அநீதியை இழைத்து வரும் பா.ஜ.க. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாக்க இந்தியா கூட்டணியை உறுதியாக வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேர்தல்!

நம்முடைய நாட்டை மத – இன – சாதி – மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி இடஒதுக்கீட்டை இரத்து செய்யப் பத்தாண்டுகால ஆட்சியில் எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு! தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட கொடுக்காமல் வஞ்சித்தது மோடி அரசு! சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பா.ஜ.க. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? பெருமதிப்பிற்குரிய அய்யா ராமதாஸ் அவர்கள்! தன்னுடைய உயிர் என்று அவர் சொல்லிக் கொள்ளும் சமூகநீதி கொள்கைக்குப் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து, அவர்களுடைய வேட்பாளர்களையும் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் போற்றிப் புகழ்கிறாரே! சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார்? மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் அய்யா ராமதாஸிடம் நிருபர் கேள்வி கேட்டபோது, “சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை! இருந்தால், அதைதான் கொடுப்பேன்” என்று சொல்லி, பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால், இப்போது அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்? இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார்… யாமறியேன் பராபரமே! ஆனால்… அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், இதைப் பற்றி விளக்கமாகப் பேச விரும்பவில்லை!

 

The post திமுகவுக்கு சமூக நீதி என்பது உயர்மூச்சான கொள்கை: விக்கிரவாண்டி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Dimuga ,Chief Minister ,Vikrawandi Election Campaign Committee ,K. Stalin ,Timuga ,India Alliance ,Social Justice Government ,Vanni ,Stalin ,Viluppuram district ,Wickravandi ,Vikrawandi ,Election Press Conference ,Dinakaran ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை