×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை: தீபாவளியை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஏராளமானோர் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். இங்கு ரூ.1 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நேரங்களில் அதிகளவில் ஆடுகள் விற்பனை நடைபெறும். இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக சென்னை, திருச்சி, சேலம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.

ஒரு ஆடு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் உளுந்தூர்பேட்டை- சேலம் ரோட்டில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதுதவிர ஆட்டுச்சந்தை காரணமாக அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகளிலும் விற்பனை களைகட்டியது. அடுத்தவாரம் புதன்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ulundurpet market ,Diwali festival ,Ulundurpet ,Diwali ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...