×

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் புத்தாடைகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் படையெடுப்பு, இனிப்பு, பட்டாசு விற்பனையும் களைகட்டியது

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை தமிழகம் முழுவதும் புத்தாடைகள் வாங்க பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். இதேபோல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களைகட்டியது. தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது வழக்கம். இதன் காரணமாக, பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர்.

நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலை பார்க்க முடியாத நிலை இருந்தது. அந்த அளவுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதேபோல நேற்றும் சென்னையின் முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை முதலே அதிகமாக காணப்பட்டது.

சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடக எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்த காட்சியை காண முடிந்தது. அவர்கள் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். மாலை நேரத்தில் இந்த கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு தெருவில் இருந்து மறு தெருவுக்கு செல்லவே திக்குமுக்காட வேண்டியது இருந்தது. இந்த கூட்டம் இரவு 10 மணி வரை காணப்பட்டது.

அதேபோல சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், இந்த கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் வேறு. இதனால், தீபாவளிக்கு முந்தைய நாளான இன்றும் பஜார் வீதிகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் மேல்படிப்பையும் சென்னையில் தங்கி தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் புறப்பட்டனர். இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. இதனால், நேற்று இரவு முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர்.

பண்டிகைக்கு முன்னரும், பின்னரும் அனைத்து ரயில்களிலும் இதேநிலை தான் நீடித்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்ததால் நேற்று காலை முதல் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டியில் பயணம் செய்ய குவிந்தனர்.

அவர்கள் முன்பதிவில்லா பெட்டியில் முண்டியடித்து ஏறுவதை தடுக்கும் வகையில், ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதாவது இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பயணிகளை அதன் வழியாக வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல தமிழக அரசின் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வாங்கவும் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. இன்று காலை முதல் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அனைத்து ஸ்வீட்ஸ் கடைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இனிப்பு, கார வகைகளை தேர்வு செய்து வாங்கினர். ஆர்டர் பல குவிந்ததாலும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் இன்று காலையிலேயே ஸ்வீட் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அரசு பேருந்துகளில் 2.6 லட்சம் பேர் பயணம்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 634 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 1,37,000 பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை 69 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

மொத்தமாக காலை முதல் மாலை வரை சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 4,176 பேருந்துகளில் 2 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இந்த ஆண்டு பயணம் செய்ய தற்போது வரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 702 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மட்டும் ரூ.11 கோடியே 78 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

முன்பதிவு செய்யாமல் மக்கள் கூடுதலாக பயணம் செய்ய வந்தாலும் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அரசு பேருந்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த விரும்புகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட 5% குறைவாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். புதிதாக எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று கூறினார்.

The post தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் புத்தாடைகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் படையெடுப்பு, இனிப்பு, பட்டாசு விற்பனையும் களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Celebration of Diwali festival day ,Tamil Nadu ,Chennai ,Diwali ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...