×

புயல் வெள்ளத்தை பயன்படுத்தி வெளியேற்றியதால் விபரீதம் வடசென்னை குடியிருப்புகளை சூழ்ந்த தொழிற்சாலை கழிவுகள்: மழைநீரில் கலந்து தேங்கியதால் வீட்டிலேயே முடங்கிய மக்கள்

சென்னை: வெள்ளநீர் புகுந்ததால் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வடசென்னை தொழிற்சாலைகள், மழைநீரில் கலந்து கழிவுகளை வெளியேற்றியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் தாழ்வான பகுதிகளில் இன்னும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மழைக் காலங்களில் சாதாரண மழைக்கே வடசென்னை மக்கள் பெரும் பாதிப்புகளை சந்திப்பார்கள். தற்போது, இடைவிடாது 36 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல் மழையால் வடசென்னை மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்கள். இந்த பெருமழை சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை. சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் தரைத்தளம் முற்றிலும் மூழ்கியது. இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மிஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் நாசமாக்கிவிட்டது. பெருமழை காரணமாக, பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பி வழிந்ததால் உபரிநீர் திறக்கப்பட்டன.

கொசஸ்தலை ஆறு மற்றும் கால்வாய்கள் வழியாக வெளியேறிய நீர், எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமான வெள்ளநீரை உள்வாங்க முடியாமல், முகத்துவாரம் ஸ்தம்பித்தது. இதனால் நீர் வழித்தடங்களில் வெள்ளநீர் பின்னோக்கி ஏறி, பல ஆயிரம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளை மூழ்கடித்தது. இந்த எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் வீடுகளுக்கும், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள், கார்கள் போன்ற வாகனங்களில் பரவியதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான கன ரக, நடுத்தர, குறு தொழிற்சாலைகள் வடசென்னையில்தான் அமைந்துள்ளன. சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, அசோக் லேலண்டு, எண்ணூர் பவுண்டரீஸ், கோத்தாரி உர ஆலை, எண்ணூர் அனல் மின் நிலையம், எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை, என்பீல்டு, சிம்சன் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இங்குதான் செயல்படுகின்றன. இதுதவிர நூற்றுக்கணக்கான பருப்பு ஆலைகள், பாத்திரம் தயாரிக்கும் தொழிற்கூடங்கள், மிட்டாய், ரொட்டி, தின் பண்டங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கில் உள்ளன. மேலும், மணலி, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் ரசாயனம் மற்றும் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதை வெளியேற்றும் பணியில் தொழில் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மழைநீருடன் தொழிற்சாலை கழிவுகளும் கலந்துள்ளது. இதை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ஏராளமான தொழிற்சாலைகள் வெள்ளப் பாதிப்பை பயன்படுத்தி தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்ற முடியாமல் இதுவரை தேக்கி வைத்திருந்த கழிவுகள் அனைத்தையும் வெள்ளநீருடன் கலந்து விட்டுள்ளனர். இந்த கழிவுகள் அனைத்தும் மழைநீருடன் பெருக்கெடுத்து சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீருடன் கலந்து விட்டது. வீடுகளை தொழிற்சாலை கழிவுகளுடன் சேர்ந்த மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும், கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

The post புயல் வெள்ளத்தை பயன்படுத்தி வெளியேற்றியதால் விபரீதம் வடசென்னை குடியிருப்புகளை சூழ்ந்த தொழிற்சாலை கழிவுகள்: மழைநீரில் கலந்து தேங்கியதால் வீட்டிலேயே முடங்கிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,CHENNAI ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது