×

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 352 தாழ்தள பேருந்துகள் வாங்க முடிவு: போக்குவரத்து கழகம் திட்டம்

சென்னை: கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்குவது தொடர்பாக உள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் சார்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்குவது தொர்பான சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் உள்ள பேருந்து பயணிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க பெருநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த வகையான தாழ்தள பேருந்துகளில் படிக்கட்டுகள் மிக உயரத்தில் அமைக்கப்படாமல் தரையை ஒட்டிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக பேருந்துகளில் ஏறுவதற்கு ஏதுவாக படிக்கட்டுகள் இருப்பதே இதன் சிறப்பம்சம். இதற்காக, 352 தாழ்தள பேருந்துகளை பெருநகர போக்குவரத்து கழகம் வாங்க முடிவு செய்துள்ளது.

சென்னை அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தவிர கோவை மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ஜெர்மன் அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியுடன் வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1871 டீசல் பேருந்துகளும், பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு 245 பேருந்துகளும், மதுரை மற்றும் கோவைக்கு 251 பேருந்துகளும், விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணத்திற்கு 33 பேருந்துகளும், திருநெல்வேலிக்கு 50 பேருந்துகள் கிடைக்கும் எனவும் தெரிகிறது.

இவை தவிர இ – பேருந்துகளை கொள்முதல் செய்து அதை தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்குவது பற்றி தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. மேலும், தற்போது இயங்கி வரும் டீசல் பேருந்துகளை, வரும் காலங்களில் முழுவதுமாக மின்சார பேருந்துகளாக மாற்றவும் தமிழக அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் அடுத்த மாதம் அதாவது நவம்பர் இறுதிக்குள் தமிழகத்தில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இ – பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தால் இனி சென்னை, கோவை, மதுரை பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 352 தாழ்தள பேருந்துகள் வாங்க முடிவு: போக்குவரத்து கழகம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation Project ,Chennai ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...