×

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை: அறுவடைக்கு தயாரான கரும்பு, நெற்பயிர்கள் சேதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மணிநேரத்தில் 39 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. திடீரென காலை 7 மணி முதல் கனமழை பெய்யத் துவங்கியது. காலை 7 மணிக்குத் துவங்கி 11 மணி வரை இடைவிடாமல் 392.10 மி.மீ (39 செ.மீ) அளவுக்கு கன மழை கொட்டியது. திண்டுக்கல் நகர் மட்டுமல்லாது புறநகர் மற்றும் கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு, வேடசந்தூர், பழநி, ஒட்டன்சத்திரம் உள்பட மாவட்டம் முழுக்க கனமழை கொட்டியது. இதனால், மாவட்டம் முழுக்க சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

பழநி அருகே கோம்பைப்பட்டியில் ஏராளமான விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கின. 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இந்த திடீர் மழையால் பழநி பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. சண்முக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் மழை காரணமாக பழநி கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நனைந்தபடியே சாமி தரிசனத்திற்கு சென்றனர். பழநியில் மட்டும் 93 மிமீ மழை பதிவானது. கொடைக்கானலில் நேற்று காலை கொட்டிய மழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாக இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர் மற்றும் கருப்புகள் நீரில் மூழ்கி நாசமானது.

* குன்னூரில் நிலச்சரிவு; வீடுகள் சேதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை குன்னூர்-மேட்டுபாளையம் சாலையில் காட்டேரியை அடுத்து நந்தகோபால் பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் மற்றும் மண் சாலையில் சரிந்து விழுந்தன. இதேபோல் குன்னூர் பகுதியில் மரங்கள் விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன. தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், நேற்று குன்னூருக்கு சென்ற மலை ரயில் தாமதமானது. இந்நிலையில், நிலச்சரிவு அபாயத்தால் இன்றும், நாளையும்ச் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை: அறுவடைக்கு தயாரான கரும்பு, நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...