×

வைரம்

வைரம் ஒரு படிக நிலையில் உள்ள கரிமம் ஆகும். பட்டை தீட்டிய வைரம் பிரகாசமாக ஒளிர்ந்து ஆடை ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. நவரத்தினங்களுள் வைரமும் ஒன்று. ஒரு பொருளின் உறுதி அல்லது திண்மையை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோசின் திண்மை அளவுகோல் என்ற முறையின்படி வைரத்தின் திண்மை எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படையிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. இதன் மிகுதியான கடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் சில பொருட்களை அறுத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரத்தைச் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலேயே வைரம் பெருமளவில் காணப்படுகிறது. கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

பழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும், தற்போது உலகில் 96 சதவீதம் வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்துதான் கிடைக்கிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கு அருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப்பட்டு காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை.

1772ம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைரக் கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழச் செய்து, கார்பன்-டை ஆக்சைடு மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன்தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797ல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும்போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்பதை விளக்கி இந்தப் பொருட்களின் ரசாயன சமநிலையை நிறுவினார். பழங்காலத்தில் இருந்தே வைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தான். வெள்ளை ஒளியைச் சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும்.

 

The post வைரம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…