×

வேளாண்துறையில் இருந்த தென்னை பயிர் தோட்டக்கலை துறையில் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தீர்மானம்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் வேளாண்துறையில் இருந்த தென்னை பயிரை சமீபத்தில் தோட்டக்கலை துறையுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தென்னை பயிரை விடுவித்து, தோட்டக்கலை துறையின் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் இணைக்கும் வகையில் கடந்த மாதம் 27ம் தேதி அரசாணை வெளியானது. ஏற்கெனவே, ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தால் தென்னை பயிரை தோட்டக்கலை பயிர் என வகைப்படுத்தி உள்ளனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பயிர் சாகுபடி பரப்பை இறுதி செய்திட, அந்தந்த மாநில தோட்டக்கலை துறையின் மூலமாக மட்டுமே தென்னை பயிருக்கான சாகுபடி பரப்பளவு தொடர்பான அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தனி துறை இயங்கி வருகிறது. இவ்வாறு தனி துறை இல்லாத மாநிலங்களில், வேளாண்மை துறையின்கீழ் தென்னை பயிர் வேளாண்மை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் தென்னை ஆராய்ச்சி நிலையங்கள், கோவை தோட்டக்கலைக் கல்லூரி முதல்வரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இத்துடன் தென்னை மரங்களுக்குள் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் பயிர்களும் தோட்டக்கலைப் பயிர்களாகவே உள்ளன. எனவே தென்னை மரப்பயிர் அடிப்படையில் ஒரு தோட்டக்கலை பயிராகும்.

இதற்காக கடந்த சில ஆண்டுகளில் தோட்டக்கலைத் துறையில் போதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு, தற்போது தென்னை பயிரினையும் சேர்த்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தோட்டக்கலைத் துறை சீரிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது. தற்போது வெளியிடப்பட்ட அரசாணை மூலமாக வேளாண் துறையின்கீழ் இயங்கி வரும் 22 தென்னை நாற்றுப் பண்ணைகள், 16 தென்னை ஒட்டு மையங்கள், 5 தென்னை ஒட்டுண்ணி வளர்ப்பு மையங்கள், ஒரு குட்டை மற்றும் நெட்டை ஒட்டுநாற்றங்கால் உற்பத்தி மையம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களின் பணியிடங்களுடன் தோட்டக்கலைத் துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று செங்கல்பட்டில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பா.சிவகுமார், மாநில செயலாளர் சு.சிவகுமார், மாநில பொருளாளர் வெ.சுதா தலைமையில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

The post வேளாண்துறையில் இருந்த தென்னை பயிர் தோட்டக்கலை துறையில் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of ,
× RELATED திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை