×

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது கூட்டம் புற்றுநோய் மருந்துக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு

* மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது பற்றியும் ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி விக்யான் பவனில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படுவது பற்றி முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை பாஜ ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவ்வப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். ஒவ்வொரு முறை இந்த கூட்டத்தின் போது பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரியில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டு வருகின்றன. கடைசியாக 49வது கவுன்சில் குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்தது.

இந்தநிலையில் டெல்லி விக்யான் பவனில் இன்று (11ம் தேதி) காலை 11 மணிக்கு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் சமீபத்தில் நிதியமைச்சராக பதவியேற்ற தங்கம் தென்னரசு பங்கேற்றார். இவர் பங்கேற்கும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும். இவருடன் தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தமும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு வழங்குவது, மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மிக முக்கியமாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்திய விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வகையில், அந்த நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ விளையாட்டுகள், குதிரை பந்தயம் போன்றவைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டுமென அனைத்து மாநில நிதியமைச்சர்களின் குழு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரிந்துரை வழங்கியிருந்தது. இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் பயன்பாட்டு வாகனங்களுக்கான விளக்கத்தை வகுத்து எஸ்யுவி வாகனங்களை போல எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீத செஸ் வரி விதிப்பது குறித்து கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைப்பது தொடர்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். நாட்டில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவது மற்றும் இந்தாண்டு இறுதியில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

The post டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது கூட்டம் புற்றுநோய் மருந்துக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,GST Council ,New Delhi ,Union Finance Minister ,Vikyan Bhavan ,GST ,Council ,Dinakaran ,
× RELATED வரும் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்