புதுடெல்லி: டெல்லியில் பெய்த கனமழையை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு இடைவிடாது பெய்த மழையால் நாடாளுமன்ற வளாகமும் மழைநீரால் சூழப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு செல்லும் சாலைகளும் நாடாளுமன்ற வளாகத்தின் உள்பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்திருந்தது.
அத்துடன் நாடாளுமன்ற லாபி பகுதியின் மேற்கூரையில் இருந்து நீர் கசிந்து கொண்டே இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடித்து ஊழியர்கள் வெளியே கொட்டி வந்தனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில், ‘நாடாளுமன்றத்தின் மைய பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். மேலும் அனைத்து கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் மற்ற கட்சி எம்பிக்களும் இந்த பிரச்னையை தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கேள்வி எழுப்பினர்.
* ஒன்னும் இல்ல.. சின்ன கசிவுதான்..
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழை நீர் கசிந்தது தொடர்பாக மக்களவை செயலகம் விளக்கம் அளித்தது. அதில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறிய நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மண்டபத்தின் மீது கண்ணாடி குவிமாடங்களை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் பிசின் பொருள் இடம்பெயர்ந்ததால் இந்த நீர் கசிவு ஏற்பட்டது. அந்த பிரச்னையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், தண்ணீர் கசிவு எதுவும் ஏற்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* வெளியே வினாத்தாள் கசிவு உள்ளே மழைநீர் கசிவு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் கசியும் வீடியோவை எதிர்க்கட்சி எம்பிக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளனர். காங்கிரஸ் மக்களவை எம்பி மாணிக்கம் தாகூர், ‘‘வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழைநீர் கசிவு’’ என கேலி செய்துள்ளார்.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் கசிவு நிற்கும் வரை ஏன் நாம் பழைய நாடாளுமன்றத்திற்கு செல்லக் கூடாது?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி சையது நசீர் ஹூசைன், ‘‘100 ஆண்டு பழமையான பழைய நாடாளுமன்றத்தில் இதுபோன்ற எந்த கசிவும் ஏற்படவில்லை. ஆனால் புதிய நாடாளுமன்றம் கட்டி ஒரே வருடத்தில் மழைநீர் கசிய ஆரம்பித்து விட்டது’’ என கூறி உள்ளார்.
The post டெல்லியில் பெய்த கனமழை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நீர் கசிவு: எம்பிக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.