×

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்; காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்?.. ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்? என்று ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ெடல்லியில் மல்லியுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ெவளியிட்ட பதிவில், ‘டெல்லி காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்? குற்றவாளிகளைக் காப்பாற்ற ஒன்றிய அரசு விரும்புகிறதா? நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு வீரர்கள், இன்று நாடாளுமன்றத்திற்கு அடுத்த தெருவில் கண்ணீருடன் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை யாரும் கேட்பதில்லை.

ஒன்றிய அரசு விசாரணை நடத்தப்படும் என்று கூறியது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. அதனால் குற்றவாளிகளை காப்பாற்ற ஒன்றிய அரசு விரும்புகிறதா? ராகுல்காந்தி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ சென்ற போது ஒரு பெண்ணின் வலியைக் கேட்டார். அதனை பொதுவெளியில் தெரிவித்தார். ஆனால் அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. அதேநேரம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? ஆளுங்கட்சியின் ஆணவத்தால், வீரர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. போராடும் வீராங்கனைகளை ஆதரிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்; காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்?.. ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Priyanka Gandhi ,Union Government ,New Delhi ,
× RELATED மதுபான மாபியா செய்தி வெளியிட்ட டிவி...